சுவிற்சர்லாந்தில் நடாத்தப்பட்ட முப்பதாவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வு
சுவிற்சர்லாந்து (Switzerland) தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வு, 30 ஆவது பொதுத்தேர்வாக நேற்று(04.05.2024) நாடுதழுவிய வகையில் 57 தேர்வு நிலையங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த தேர்வுக்கு முதலாம் வகுப்புத் தொடக்கம் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் கல்விபயிலும் 3700 வரையிலான மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
ஒரு இனம் அடையாளம்
தமிழ்மொழித்தேர்வுடன் சைவசமயம், றோமன் கத்தோலிக்க சமயம் ஆகிய சமயபாட பரீட்சைகளும் நடைபெற்றன. பத்தாம் வகுப்பு பரீட்சையில் 365 மாணவர்களும்.பதினோராம் வகுப்பு பரீட்சையில் 250 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சையில் 256 மாணவர்களும் தோற்றியுள்ளனர்.
வாழிடக்கல்வியில் பல மொழிகளுடன், தம் தாய்மொழியையும் விருப்புடன் கற்று ஆர்வத்துடன் தேர்வு எழுதிய குழந்தைகளை வாழ்த்துவதுடன், அவர்களை ஊக்குவித்து வழிநடத்தும் பெற்றோரையும் தமிழ்க்கல்விச்சேவை போற்றுவதாக கூறியுள்ளது.
மேலும், தாய்மொழியின் பெயரிலேயே ஒரு இனம் அடையாளப்படுத்தப்படுகிறது. தாய்மொழியைப் பேணாத இனம் பிற இனங்களுடன் கலந்து, கரைந்து அழிந்துவிடும்.
தம் தாய்மொழியை இடைவிடாது கற்றுவரும் தமிழ்ப்பிள்ளைகள் தன்னம்பிக்கையுடனும் பண்புடனும் தமிழர் எனும் பெருமையுடனும் வாழ்வதுடன் அடுத்துவரும் பரம்பரையினருக்கும் தமது தாய்மொழி, பண்பாடு, வரலாறு, கலைகளைக் கடத்திச் செல்வார்கள் என நம்பிக்கைகொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
அனைத்துலகப் பொதுத்தேர்வு
இப்பொதுத்தேர்வானது 2022 ஆம் ஆண்டுமுதல் அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பெறும் அனைத்துலகப் பொதுத்தேர்வின் ஒரு பகுதியாக நடாத்தப்பெறுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தேர்வினைச் சிறப்பாக தேர்வுக்குழு உறுப்பினர்கள், நடாத்துவதற்காகத் தமிழ்க் கல்விச்சேவையின் மாநில இணைப்பாளர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், இளையோர்கள் ஆகியோர் தமிழ்ப் பள்ளிகளின் பல அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்வு நிறைவாக நடைபெற அனைவருக்கும் தமிழ்க்கல்விச்சேவை நன்றியைத் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |