நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை: வீ.ஆனந்தசங்கரி
நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை நிறுத்திக்கொள்ளலாம் என்பதே எனது கருத்து என தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி தலைமையாகத்தில் இன்றையதினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நீதிபதி விவகாரம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,''தற்போது முல்லைத்தீவு நீதிபதி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் போராட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
நீதிபதி விடயத்தை பெரிதாக்க வேண்டிய தேவை இல்லை நிறுத்திக் கொள்ளலாம் என்பதே எனது கருத்து.
ஏனெனில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது இன்று நேற்று இடம்பெறும் விடயம் அல்ல என்பது சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு தெரியும்.
2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றம் சென்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ளார்கள் .
அவர்கள் தாங்களாகவே கள்ள வாக்கு போட்டோம் என கூறியவர்கள் இன்றும் நாடாளுமன்றத்தில் உள்ள நிலையில் இலங்கை சட்டம் அவர்களை ஒன்றும் செய்யவில்லை.
ஆகவே இலங்கையில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் ஆட்சி அதிகாரம் உள்ளவர்களை பாதுகாக்கின்ற நிலையில் மக்களை கட்டுப்படுத்துவதற்கு புதுச் சட்டங்கள் தேவையில்லை.
தேவையற்ற சட்டங்கள்
இலங்கையின் தற்போதைய நிலையில் தேவையற்ற சட்டங்களான பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் என்பன தற்போதைய சூழ்நிலையில் தேவையற்ற ஒரு விடயம்.
நாட்டில் தற்போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் ஊடக நிகழ்நிலை காப்பு சட்ட மூலம் என்பன சட்டங்கள் ஆக்கும் செயற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன.
இந்த சட்டமூலங்கள் தற்போது நாடு இருக்கும் நிலையில் தேவையற்ற ஒன்று. நாட்டுக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுமானால் 24 மணித்தியாலத்திற்குள் நாடாளுமன்றத்தை கூட்டி சட்டம் இயற்ற இலங்கை நாடாளுமன்றத்தால் முடியும்.
உதாரணமாக கூற வேண்டுமானால் வேறு யாரையும் அல்ல. ஆனந்த சங்கரி துரோகியென சுட்டுக் கொல்வதற்கும் இலங்கையில் சட்டம் இயற்ற முடியும்."என அவர் மேலும் தெரிவித்தார்.