தமிழை சீண்டும் சீன மொழி! இலங்கையில் தொடரும் புறக்கணிப்பு
இலங்கையில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள், ஏதாவதொரு நெருக்கு வாரத்துக்கு நாளாந்தம் முகங்கொடுத்துக்கொண்டே இருக்குமளவுக்கு, ஒவ்வொரு புறங்களாகச் சீண்டிப்பார்க்கும் செயற்பாடுகள், அப்பட்டமாகவும், மறைமுகமாகவும் முன்னெடுக்கப்படுகின்றன.
அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருக்கும் மொழியுரிமை அப்பட்டமாக மீறப்பட்டு, சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுவது அதனோர் அங்கமாகும்.சட்டமா அதிபர் திணைக்களக் கட்டடத்தில், சீன அரசாங்கத்தின் நிதி உதவியில் இலத்திரனியல் நூலகம் நிறுவப்பட்டது.
நினைவுப்பலகையில், இலங்கையின் அரச கரும மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி முற்றுமுழுதாகப் புறக்கணிக்கப்பட்டு, சீன மொழிக்கு மூன்றாமிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும், கடுமையான அழுத்தங்கள் காரணமாக, பதிக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய நினைவுப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களக் கட்டடத்தில் சீனமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பதியப்பட்ட நினைவுப்பலகை ஒரு தற்செயலான நிகழ்வாகப் பார்க்க முடியாது. ஏனெனில், கொழும்புத் துறைமுக நகர வரவேற்புக் கல்லிலும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதன் காரணமாக,இலங்கையின் மும்மொழிக்கொள்கையை மதித்து நடக்குமாறு கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள சீன அரச நிறுவனத்துக்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.
யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள சீனாவின் அரச நிறுவனம் (China State Construction Engineering Corporation) ஒன்றில் பெயர்ப் பலகை மற்றும் கட்டட வெளிப்புறம் ஆகியவற்றில் சீன மற்றும் ஆங்கில மொழிளை மாத்திரம் பயன்படுத்தியுள்ள புகைப்படம் வெளியாகியிருந்தது.
அதில் அலுவலகப் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கட்டடத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ளதோடு தனியான பெயர்ப் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி பிரதான மொழியாக இருக்கும் பட்சத்தில், தமிழும் - சிங்களமும் இல்லாது தனியே சீனமொழி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் இங்கு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள பெயர் பலகையில் சிங்கள மொழி முன்னரே இடம்பெற்றிருக்கவில்லை என உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன .
இதேவேளை, ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் உயர்ஸ்தானிராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய உயர்ஸ்தானிகராலயம் இவ்வாறு சிங்கள மொழியை புறந்தள்ளியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகநாடுகள் பலவற்றின் நிதியுதவியின் கீழ், பல்வேறான செயற்றிட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை நினைவுகூரும் வகையில், நினைவுக் கல்லில் அல்லது பலகையின் அடியில், ‘இந்த நாட்டினால் அன்பளிப்பு செய்யப்பட்டது’ என நிதி உதவியளித்த நாட்டின் பெயருடன் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், சீனாவின் நிதி உதவியளிப்பின் ஊடாக முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு மட்டும், சீன மொழிக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முழுவதும், சீன உதவியுடன் நடைபெறுகின்ற கட்டுமானப் பணிகளில், ஐந்து லட்சம் சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றார்கள். அவர்களுக்காக, சீன மொழிப் பள்ளிகள், சீனக் கலை அமைப்புகள், சீனப் பயிற்சியாளர்களின் கராத்தே வகுப்புகள், ஸ்ரீலங்காவில் தொடங்கப்பட்டுள்ளன இதன் விளைவாக தெருக்கள், புகையிரத நிலையங்கள், விடுதிகளின் பெயர்ப் பலகைகளில், சீன மொழி எழுத்துகள் எழுதப்பட்டு வருகின்றன.
தமிழர்களுடைய பகுதிகளான , அனலைத் தீவு, நெடுந்தீவு, நயினா தீவு ஆகிய பகுதிகளில் அமைய இருக்கின்ற சூரிய மின்விசைத் திட்டமும், சீனாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது.
எனவே, ஸ்ரீலங்கா சீனாவின் தளமாக மாறி வருகின்றது ஒவ்வோர் இனக் குழுவினதும் அடையாளம், அதன் தாய் மொழியாகும். அதுவே அதன் தனித்துவம்; சிறப்பு. இதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலேயே உலக தாய்மொழி தினம், பெப்ரவரி 21ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது.
தற்போதைய நிலைமை நீடித்தால், தமிழைத் தாய் மொழியாகப் பேசுகின்ற, இலங்கையில் வாழ்வோர், தாய்மொழி தினத்தைக் கொண்டாடவே முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.
பிறமொழிகளைக் கற்றுக்கொள்வதிலோ, தெரிந்து வைத்திருப்பதிலோ எவ்விதமான
தவறுகளும் இல்லை, ஆனால், அரச கரும மொழியொன்றை வேண்டுமென்றே இல்லாமல்
செய்துவிட்டு, பலவந்தமாகப் புகுத்தப்படும் எந்தவொரு குடியேற்ற
மொழிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
