ஜெய்சங்கரை சந்தித்த தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களின் தலைவர்கள்
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை தமிழ் நாட்டின் கடற்றொழிலாளர்களின் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
பாக்-வளைகுடா பகுதியில் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படும் கடற்றொழிலாளர்கள் விடயத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசின் ஆதரவை கோரி நேற்று(19)இந்த சந்திப்பு இடம்பெற்றது.
பொய்யான குற்றச்சாட்டு
இதன்போது தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்த கடற்றொழிலாளர்களின் சங்கத் தலைவர் பி.ஜேசுராஜா
ஊடகங்களுக்கு தகவல் வழங்கியபோது, மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில்
வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தற்போதைய நிலவரத்தை எடுத்துக் கூறியதாகத்
தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தமது கடற்றொழிலாளர்கள் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பிரதிநிதிகள் ஜெய்சங்கரிடம் கூறியுள்ளனர்.
சமீப காலங்களில், இலங்கை அரசு படகு ஓட்டுபவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், மீண்டும் மீண்டும் குற்றம் செய்யும் கடற்றொழிலாளர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.
மத்திய அரசு பேச்சுவார்த்தை
இத்தகைய செயல் கடற்றொழிலாளர்கள் மத்தியில் பீதியை உருவாக்கியுள்ளது.அத்துடன் உயிர் வாழ்வது குறித்த பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.
எனவே, உறுதியளிக்கும் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். எனவே இலங்கை அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரே தீர்வாகும் என்று கடற்றொழிலாளர்கள் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளின் எண்ணிக்கை குறித்தும் வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
2018 முதல், பறிமுதல் செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படகுகள் திருப்பித் தரப்படவில்லை என்ற தகவலை இராமநாதபுரம் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |