தேசிய இனத்தின் திரட்சியாக தமிழ் பொதுவேட்பாளரை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி, தமிழர் தேசத்தினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTF) தெரிவித்துள்ளது.
விடுதலை அரசியலின் முனைப்பாக தேசமாக, தேசிய இனத்தின் திரட்சியாக, சங்கு சின்னத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறு இலங்கையில் உள்ள தமிழர்களை, மற்றும் வாக்களிக்க தகுதியுள்ள புலம்பெயர் தமிழர்களை உரிமையோடு வேண்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசு
கடந்த செப்டெம்பர் 7ம் திகதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இது தொடர்பான கருத்தாடல் இடம்பெற்றிருந்ததோடு, ஏகமனதாக இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையில் ஈழத்தமிழர்கள் ஓர் அரசுக்குரிய தேசிய இனம் என்பதனை வெளிகாட்டி, நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை, 2009ம் ஆண்டு மிகப்பெரும் இனஅழிப்பொன்றின் ஊடாக அழித்த சிங்கள பௌத்த பேரினவாத அரசு, தமிழர் தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கின்றது.
இராணுவ மயமாக்கல், பௌத்த மயமாக்கல், சிங்கள மயமாக்கல் ஊடாக தமிழர் தேசத்தில் தனது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்ற சிங்கள பேரினவாத அரசு, ஈழத்தமிழர்களை தனது அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் அடிமைகளாக வைத்திருக்க முனைவதோடு, ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை நீக்கம் செய்ய முனைகின்றது.
தமிழர் தேசத்தின் திரட்சி
இச்சூழலில் ஈழத்தமிழர் தேசிய இனமாக, தேசமாக தமது திரட்சியினை உலகிற்கு சங்காய் முழங்க வேண்டிய காலமாக இன்றிருக்கின்றது.
இலங்கைத்தீவினை மையப்படுத்திய இந்திய பெருங்கடல் புவிசார் பூகோள அரசியலில், தமிழர் தேசத்தின் திரட்சியினை வெளிக்காட்டுவதன் வழியே, நம்மை சக்திமிக்க ஓர் தரப்பாக வெளிக்காட்ட வேண்டிய அரசியற்சூழல் காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழர் தேசத்தின் நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான நிலைப்பாட்டினை, அனைத்துலக சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையில், இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலை ஓர் கருவியாக கையாளும் ஓர் உத்தியாகவே, தமிழர் தேசத்தினரால் முன்மொழியப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளரை நாம் கருதுகின்றோம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |