சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற தமிழ் ஆற்றுப்படுத்துனர்கள் கற்கை நிகழ்வு (Photos)
சுவிற்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழும் மக்கள் பல் சமயப் பண்பாட்டினைக் கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இம் மக்களுக்கு தத்தமது சமயத்தில், பண்பாட்டில், தாய்மொழியில் நற்தகைசால் தேரச்சித்திறன் கொண்ட ஆற்றுப்படுத்துனர்கள் தேவையினை உணர்ந்து இதற்கான கற்கையினை வழங்குவதற்கு ஐ.கே. கே அமைப்பினால் பல்சமய இல்லத்தில் டிசம்பர் 2019 பல்சமய ஆற்றுப்படுத்துனர் மன்றம் 'Verein multireligiöse Begleitung“ நிறுவப்பட்டிருந்தது.
இம்மன்றத்தில் பல்சமய இல்லமும், சைவநெறிக்கூடமும் நிறுவன உறுப்பினராக உள்ளனர்.
இவர்களின் கடந்தகால கூட்டு உழைப்பில் பேர்ன் செயல்முறை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சான்றிதழுடன் கற்கைநெறி உருவாக்கப்பட்டிருந்தது.
கற்கை நிறைவு
2022 – 2023 காலத்திற்குள் முதலாம் கற்கை “FORTBILDUNG ZUM EHREMAMTLICHEN BEGLEITER“ நடாத்தப்பட்டது.
இதில் கிறித்தவ, இசுலாமிய, யூத, சைவ சமயத்தவர்களும், சமயம் சாராதவர்களுமாக பங்கெடுத்தனர்.
இவர்களுக்கான கற்கை 14. 03. 2023 செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
பேர்ன்மாநிலத்தில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் கற்கைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 15.30 மணிமுதல் நடைபெற்றது.
முற்பகல் 11.00 மணிக்கு ஊடக சந்திப்பும் இக்கற்கை தொடர்பான தகவலும் வழங்கப்பட்டிருந்தது.
இக்கற்கையினை பேராசிரியை. மற்றும் முனைவருமான அந்திரேயா ஆபிரகாம் மற்றும் சிறப்பு ஆற்றுப்படுத்துனர் பாஸ்கால் மோசிலி ஆகியோர் கடந்த இரு வருடங்களில் நெறிப்படுத்தி நடாத்தியிருந்தனர்.
சான்றிதழ்
பேர்ன்மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் மற்றும் மூதாளர் இல்லங்களிலும் ஆற்றுப்படுத்துவதற்கு தகைவழங்கும் சான்றிதழ் கற்கை நிறைவு செய்த அனைவருக்கும் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் மற்றும் திருநிறை. பாஸ்கால் மோசிலி இருவராலும் வழங்கி வைக்கப்பட்டது.
இச்சான்றிதழ்களுடன்அடுத்த கட்டமாக பேர்ன் மாநில அரசின் அனைத்து துறைகளுக்குள்ளும் ஆற்றுப்படுத்துனர்கள் உட் செல்வதற்கு ஏதுவாக அடையாள அட்டையும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
நோக்கம்
பல் சமயத்தவர்களும் அல்லது சமயம் சாராதவர்களும் தமது தனிப்பட்ட திறனுடன்மேலும் நுணுக்கமான செயற்திறன் கல்வியினை ஆற்றுப்படுத்தல் துறையில் பெற்றுக்கொள்வர்.
கற்கைத் தகை
இக்கற்கையில் பங்கெடுப்பதற்கான தகைமைகளாக,
• தொழிற்கல்வி அல்லது தன்னார்வ அமைப்பில் நீண்டபட்டறிவு
• தமது பண்பாடு - சமயம்தொடர்பான ஆழமான அறிவு
• திடமான உள்ளம்
• உணர்ச்சிகளைகத் தாங்கிக்கொள்ளும் (கட்டுப்படுத்தும்) தகை
• மனிதர்களுடன் உரையாடும் திறன் - விருப்பு
• தளர்வான திறந்த உள்ளம்
• சிறந்த தொடர்பால் தகை
• தன்னார்வத் தொண்டில் பங்கெடுக்க தேவையான நேரம்
• குற்றவியல் அற்ற நற்பதிவுச்சான்று
• சுவிசில் பாடசாலைக் கல்வியில் பெற்ற மொழித்திறன் (ஆகக் குறைந்தது பி.1 (B1) தரத்தில் மொழித்திறன்).
உட்பொருள்
இக்கற்கையில் பங்கெடுத்து ஆற்றுப்படுத்தல் கல்வியினை மேற்கொண்டவர்கள் துறைசார் ஆற்றுப்படுத்துனர்களுடன் இணைந்து மருத்துவமனைகளில், மூதாளர் இல்லங்களில், நேரடியாக உள்ளிருப்புப் பயிற்சியினைப் பெற்றுக்கொண்டனர்.
தாம் கற்கையில் பெற்றுக்கொண்ட கல்வியினையும் மற்றும் நேரடியாகப் பெற்றுக்கொண்ட பயிற்சிகளையும் பேர்ன் செயல்முறை அறிவியல் பல்கலைக்கழக மேற்பார்வை குழுமத்தில் பரிமாறிக்கொண்டனர்.
பல் உவமைகளைக் கொண்டு கற்கையில் ஆற்றுப்படுத்தல் கோட்பாட்டு மற்றும் செயற்பாட்டுப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. நோய், இறப்பு மற்றும் நலன்பேண் செயல்கள் தொடர்பான கற்கையும் உள்ளடக்கப்பட்டது.