நாடாளுமன்ற தேர்தலுக்கான நகர்வே தமிழ் பொது வேட்பாளர் விவகாரம் : ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்திற்கொண்டே உதிரிகளாக உள்ள குழுக்களை ஒன்றிணைப்பதற்காக பொது வேட்பாளர் என்னும் நிலையை பயன்படுத்த விக்னேஸ்வரன் போன்றவர்கள் முற்படுகின்றனர் என ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண (Jaffna) ஊடக அமையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
மேலும் தெரிவிக்கையில், “தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையில் செயற்படுகின்றோம்.
இதனடிப்படையில் ஒற்றுமையை கொண்டுவர என்ன செய்யலாம் என்று நாங்கள் யோசித்தபோது இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை சிந்தித்தோம் என விக்னேஸ்வரன் தெரிவித்ததன் மூலம் தமிழ் மக்களின் அரசியலுரிமை, அவர்களின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக இவர்கள் சிறிதளவும் சிந்திக்கவில்லை.
மாறாக தமது சுய நலன்களிலிருந்தே இன்னும் பயணிக்க முற்படுகின்றனர். இதன்மூலமாக இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்கின்ற செய்தி எவ்வாறானது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.
நாட்டின் நலன், மக்களின் நலன் மற்றும் பொருளாதார நலன் என்பவற்றிலிருந்து விலகி தமது கொள்கையற்ற கோட்பாடற்ற அரசியல் இலக்கற்ற உதிரிகளை தமிழ் பொது வேட்பாளர் என்ற போர்வையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலக்கு வைத்தே இவர்களுடைய கருத்துக்கள் அமைந்துள்ளன.
சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உங்களுக்குள் ஒற்றுமையில்லை அவ்வாறு உள்ள சூழலில் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்ற கேள்வியையும் எழுப்பியியுள்ளார்.
பொது வேட்பாளர்
அதுமட்டுமல்லாது தமிழ் தேசிய அரசியல் தரப்பின் ஒற்றுமை மீதான தென்னிலங்கையின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் ஜனாதிபதியின் இந்த கேள்வி இருந்துள்ளது.
உண்மையில் ஒவ்வொரு கட்சிகளும் மக்கள் நலன்களை புறந்தள்ளி தமது சுயநலன்களை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அவர்களிடம் நிலையான கொள்கை இல்லை. ஒரு நிலையான அரசியல் இலக்கு இல்ல. மக்களுக்கான வழிகாட்டல் இல்லை என்பது விக்னேஸ்வரன் கூற்றில் இருந்து தெளிவாகப் புலப்பட்டுள்ளது.
2002 புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டதன் பின்னர் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இராஜதந்திரிகள் கண்காணிப்பாளர்களாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலும் தென்னிலங்கையிலும் நிலைகொண்டிருந்தனர்.அதில் நோர்வேயின் மத்தியஸ்தமும் இருந்தது.
இவ்வாறிருக்க வெளிநாட்டவருக்கு எமது பிரச்சினையை காண்பிப்பதற்கு பொது வேட்பாளர் என்ற பேச்சு தமது அஸ்தமித்துப்போகும் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான ஒரு பிரயத்தனமே தவிர இதனால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை.
எனவே பொது வேட்பாளர் என்ற கருத்தானது பிரிந்திருக்கும் உதிரிகளை ஒன்றிணைத்து அரசியல் இலாபம் தேடும் ஒரு செயற்பாடாகவே ஈ.பி.டி.பி கருதுகின்றது” என்றும் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |