கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞன் கைது
வெளிநாட்டு வேலைக்காக செல்ல முயன்ற இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக சிங்கப்பூர் செல்வதாகக் கூறி அவர் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார்.
மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞன் கைது
நேற்று இரவு தாம் சிங்கப்பூருக்கு பயணம் செய்வதாகக் கூறிவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசித்துள்ளார்.
7அங்கு அவர் ஓமன் நாட்டின் மஸ்கட் சென்று அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் கட்டார் எயார்வேஸ் கவுண்டருக்கு சென்று தனது ஆவணங்களை ஒப்படைத்துள்ளார்.
அதைக் கவனித்த குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் அழைத்து விசாரித்தனர். அங்கு இந்த இளைஞன் தான் கட்டாரின் தோஹாவுக்கு வேலை நிமித்தமாக செல்வதாகவும், அதற்காக அந்நாடு வழங்கிய பணி விசாவும், கட்டார் விமான டிக்கெட்டும் உண்மைகளை உறுதி செய்யும் வகையில் ஒப்படைத்துள்ளார்.
போலி வீசா
எனினும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதைத் தவிர்ப்பதற்காக போலியான சிங்கப்பூர் வீசா மற்றும் ஓமான் விமானச் சேவை டிக்கெட்டை அவர் ஆரம்பத்தில் முன்வைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.