“சீற்றமும் காயமும்” அடைந்துள்ள அவுஸ்திரேலிய தமிழ் சமூகம்
புகலிடக் கோரிக்கையாளர்கள் ஆட்கடத்தல்காரர்களிடம் சிக்கிக் கொள்வதையும், கடலில் உயிரைப் பணயம் வைப்பதையும் காட்டும் குறும்படங்களை உருவாக்குமாறு இலங்கையர்களிடம் அவுஸ்திரேலிய திரைப்படப் போட்டியாளர்கள், கோரியுள்ளமை குறித்து அவுஸ்திரேலிய தமிழ் சமூகம் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வர முயற்சிப்பதை எதிர்த்து இலங்கையில் இருந்து மக்களை எச்சரிக்கும் எழுத்துடன் “மூழ்கும் படகின் படம்” இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் விளம்பரம் இது தொடர்பில் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கு படகில் வருவதற்கு எதிராக எச்சரிக்கும் 'ஸீரோ சான்ஸ்' இணையத்தளத்தில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. இந்த போட்டியில் பங்கு பற்றுவோருக்கு “ட்ரொன்” என்ற ஆளில்லா விமானம் மற்றும் டிஎஸ்எல்ஆர் புகைப்படக் கருவி என்பன பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் படகு மூலம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களைத் தடுக்கும் அரசாங்கத்தின் பிரசாரத்தால், தானும் அவுஸ்திரேலியாவின் தமிழ் சமூகமும் "சீற்றம்" மற்றும் "காயம்" அடைவதாக தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் ஆரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தமிழர்களின் போராட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று ஆரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரசாரங்கள் இலங்கை அரசாங்கத்துக்கு தவறான செய்தியை அனுப்புகின்றன.
அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக எல்லாவிதமான அட்டூழியங்களையும் செய்ய முடியும் என்றும் யாரும் அதைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்றும் சொல்வதைப்போன்று அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் செயல் அமைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குறும் திரைப்படங்கள் 'அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக இடம்பெயர்தல்' என்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று போட்டியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை 2019-20 நிதியாண்டில் மக்கள் கடத்தல் எதிர்ப்பு பிரசாரத்திற்காக உள்துறை அமைச்சகம் ஒட்டுமொத்தமாக 800,000 டொலர்களை செலவிட்டதாக அவுஸ்திரேலிய நிதித் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவுஸ்திரேலிய எல்லைப் படை, தமது பிரசாரத்திற்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, இலங்கையை இலக்காகக் கொண்ட இணையதளம் மற்றும் திரைப்படப் போட்டிக்கு அரசாங்கம் எவ்வளவு பணம் செலவிட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
