கெஹெலியவின் சட்டவிரோத சொத்துக்கள் வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட, சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில், குறித்த வழக்கு இன்று(1) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சொத்துக்கள் வழக்கு
இந்த நிலையில், கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். இது குறித்து பிரதிவாதிகள் கோரிய 12 ஆவணங்கள் இன்னும் அரசுத் தரப்பு வழங்கவில்லை என ரம்புக்வெல்ல சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
பிரதிவாதிகளுக்கு எதிராக ஆணைக்குழு திடீரென குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்த போதிலும்,இது தொடர்பான ஆவணங்கள் பிரதிவாதிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் சார்பாக முன்னிலையான உதவி இயக்குநர் சுபாஷினி சிறிவர்தன, கோரப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
அதன்படி, ஆவணங்கள் உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் உதவி இயக்குநருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளதுடன், அடுத்த விசாரணையை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
2020 ஆகஸ்ட் 13 முதல் 2024 ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில், ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக பணியாற்றியபோது, கெஹெலிய ரம்புக்வெல்ல சட்டவிரோதமாக 97 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் கூறி, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குற்றிப்பிடத்தக்கது.



