சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று நானே கூறினேன்.! சுமந்திரன் பகிரங்கம்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் கீழ் போட்டியிடும் சிவஞானம் சிறீதரனுக்கு(S Shritharan) ஆசன ஒதுக்கீடு வழங்க வேண்டாம் என்று தான் குறிப்பிட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்(M A Sumanthiran) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கட்சிக்குள் பிளவுகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கட்சியின் தீர்மானத்தை எதிர்த்து செயற்பட்ட சிறீதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நான் நேரடியாகவே தெரிவித்தேன். அவ்வாறு வழங்கினால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் கூறுவேன் என குறிப்பிட்டேன்.
எனினும் நியமனக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான சி.வி.கே சிவஞானம்(C V K Sivagnanam), தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் அவ்வாறான தீர்மானத்தை எடுக்கக் கூடாது என்றும், அதனால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் நானும், சிறீதரனும் யாழ். தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனை நியமனக் குழுவில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டேன்.
அதுபோன்று தான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தோல்வி கண்ட எழுவருக்கு ஆசன ஒதுக்கீடு வழங்குவதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் சிறிநேசனுக்கு(Srinesan) ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
அதனையும் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு தான் தீர்மானங்கள் சில சமயயங்களில் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.