இலங்கையுடன் பேச்சுக்களை ஆரம்பிக்க தயாராகும் சர்வதேச நாணய நிதியம்
இலங்கை அதிகாரிகளுடன் வழிகாட்டுதல் குழு மூலமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராக இருப்பதாக பொன்ட் ஹோல்டர்ஸ் குரூப் என்ற இலங்கை பத்திரதாரர்களின் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டினா ஜோர்ஜீவாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறித்த உறுதிப்பாட்டை இலங்கை பத்திரதாரர்களின் தற்காலிக குழு தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் தங்கள் உத்தியோகபூர்வ கடனாளிகளுடன் இலங்கை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை இலங்கை பத்திரதாரர்களின் குழு ஏற்றுகொண்டுள்ளது.
இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
அத்தகைய ஈடுபாட்டின் விளைவாக, இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கும் பங்களிப்பதற்கும் உறுதியளிக்கும் வகையில், இந்திய அரசாங்கம், 2023ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் ஊடாக தெரிவித்திருப்பதையும் பத்திரதாரர் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
அதேபோன்று, இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்கவும் மற்றும் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு நாடு மீண்டும் அணுகலை வழங்கவும், இலங்கை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி தயாராக இருப்பதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.