அநுரவின் சீன விஜய எதிரொலி: வாக்குறுதிகளை அடிக்கோடிடும் இந்திய ஊடகங்கள்
இந்தியாவால் உளவு கப்பல்களாகக் கருதப்படும் சீன "ஆராய்ச்சி கப்பல்களை அனுமதிப்பது உட்பட பல முக்கிய விடயங்கள் இலங்கை ஜனாதிபதியின் சீன விஜயத்தின்போது கலந்துரையாடபப்படலாம் என எதிர்பார்ப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பின் மிகப்பெரிய கடன் வழங்குநராகக் கூறப்படும் சீனாவிற்கான இலங்கையின் கடன் உறுதிப்பாடுகள் மற்றும் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (BRI) முதலீடுகளின் விரிவாக்கம் ஆகியவை அநுரகுமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இரு நாடுகளும் விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹம்பாந்தோட்டையில் வணிகம்
மேலும் குறித்த செய்தியில், “இலங்கையின் இரண்டு அரசு தொலைக்காட்சிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கை எதிர்பார்க்கிறது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள மத்திய விரைவுச் சாலையை முடிக்க இலங்கை சீனாவின் உதவியையும் கோரும்.
அத்தோடு, தெற்கு துறைமுகமான ஹம்பாந்தோட்டையைச் சுற்றியுள்ள சீன தொழில்துறை மண்டலத்தையும் இந்தப் பேச்சுவார்த்தை உள்ளடக்கும்.
டிசம்பரில் டெல்லியில் இருந்து அநுர திரும்பிய உடனேயே திசாநாயக்கவை சந்தித்த உயர் சீன அதிகாரி கின் போயோங், சீன நிறுவனங்கள் ஹம்பாந்தோட்டையில் வணிகம் செய்ய ஆவலுடன் காத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
ஒரு கால கட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான கடுமையான விமர்சகராக கருதப்பட்ட திசாநாயக்க, தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு டெல்லியைத் தேர்ந்தெடுத்தார்.
நரேந்திர மோடி
இதன்போது டிசம்பரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, சீனாவைப் பற்றி வெளிப்படையாகக் குறிப்பிடும் வகையில், “இலங்கை தனது பிரதேசத்தை இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்காது” என்று உறுதியளித்தார்.
சீன சார்பு தலைவர் என கூறப்படும் மகிந்த ராஜபகச, அவரது சகோதரர் கோட்டாபய ராஜபகச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலத்தில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்குக் கையகப்படுத்துவதன் மூலம் இலங்கையுடனான தனது மூலோபாய உறவுகளை விரிவுபடுத்திய சீனா, அதைத் தொடர்ந்து கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மேம்படுத்தியது.
இந்நிலையில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட உயர்மட்டக் குழு அவருடன் சீனாவிற்கு வந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |