பொருளாதார கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை
பொருளாதார கூட்டுறவு தொடர்பில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உயர் மட்டப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
புதுடெல்லியில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருள் கொள்வனவிற்கு இந்தியா வழங்கி வரும் உதவிகளுக்காக உயர்ஸ்தானிகர் மொரகொட, நன்றியைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட முடியும் என்பது குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக்கொள்ளும் வரையில் தொடர்ந்தும் இலங்கைக்கு உதவிகளை வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டுறவினை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கான முனைப்புக்கள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.