ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இன்று(10.11.2026) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் அமைதிப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளனர்.
ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது பேச்சுவார்த்தை இதுவாகும்.
அமெரிக்கத் தூதர் ஜாரெட் குஷ்னர், அண்மைய பேச்சுவார்த்தைகள் மூலம் இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் நிலைப்பாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உறுதியுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கைக்கும், தமது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாது என்ற உக்ரைனின் நிலைப்பாட்டுக்கும் இடையில் இன்னும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
உக்ரைன் தனது பாதுகாப்புக்கான உறுதிமொழிகளையும் நீடித்த அமைதியையும் வலியுறுத்தியுள்ளது.
பேச்சுவார்த்தை
அதேவேளை, போருக்குப் பின்னரான ஐரோப்பிய பாதுகாப்புக் கட்டமைப்பு தொடர்பிலும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளும் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தமக்கான பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தியுள்ளன.
முக்கியமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கை அதிகரித்துள்ள போதிலும், நிலப்பரப்பு மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக இறுதி உடன்பாடு எட்டப்படுமா என்பது இன்னும் உறுதியாகவில்லை.