சர்வதேச ராஜதந்திரிகளுடனான சம்பந்தனின் சந்திப்பு தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை (Photos)
வார்த்தைகளை விட எழுத்துக்களை விட காட்சிகள் நிறைய உண்மைகளை சொல்லிவிடும் என சொல்வார்கள்.
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருடனான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் சந்திப்பு தொடர்பாக இரு தரப்புக்களால் வெளியிடப்பட்ட புகைப்படங்கள், அங்கு என்ன பேசப்பட்டன என்ற விடயங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்க அதை கடந்து தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன.
ஒன்றையொன்று தாழ்த்துகின்ற, ஒன்றையொன்று உயர்த்துகின்ற பிரிவுகள் எல்லாம் இருக்கின்றன என்ற அந்த யதார்த்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாகவே பலத்த சர்ச்சைகள் தமிழரசு கட்சி தொடர்பில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
சம்பந்தன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் சில தரப்புக்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலில் முதலாம் தரப்பினரால் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேவேளை மற்றொரு தரப்பும் இந்த சந்திப்பு தொடர்பான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.
முதலாம் தரப்பால் வெளியிடப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் சம்பந்தன் பேசும் சக்தியற்று கதிரையில் சாய்ந்து கிடப்பது போலவும், தூங்குவது போலவும் ஒரு எண்ணத்தை பார்ப்போர் மனதில் ஏற்படுத்தும் விதமான புகைப்படங்கள் தெரிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மறுதரப்பு உண்மையிலே அங்கு சம்பந்தன் ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினருடன் விவாதிப்பது போலவும் காரசாரமாக விவாதிப்பது போலவுமான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே இந்த புகைப்படங்கள் அங்கு என்ன பேசப்பட்டன என்ற செய்திகளை கடந்து தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற பிளவுகளை வெளிப்படுத்துகின்றன.
சம்பந்தனின் கம்பீரத்தையோ அல்லது அவரது இயலுமையை குறைக்கின்ற விதத்தில் சில புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதை உணர முடிவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வழமைக்கு மாறாக சந்திப்பின் தொடக்கம் முதல் முடிவு வரையும் சம்பந்தனே வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் முழு தகவல்களையும் தெளிவுப்படுத்தியதாக சம்பந்தன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பந்தன் சந்திப்பு இடம்பெற்றவுடன் முதலாம் தரப்பால் அவசரமாக வெளியிடப்பட்ட புகைப்படங்கள்
சம்பந்தன் ஆளுமையாக கலந்துரையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
முதலாம் இணைப்பு
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத் தூதுக்குழுவினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இன்று (31.10.2023) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டுள்ளார்.
தமிழ்த் தேசியப் பிரச்சினை
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இதுவரை இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.