பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்கள்! ஜனாதிபதியிடம் சாமர சம்பத் எம்.பி. விடுத்த கோரிக்கை
பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்துமாறு புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(25) நடைபெற்ற 2026 வரவு - செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
சாமர சம்பத் எம்.பி. கோரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
"பெண்களை அழகானவர்கள் உள்ளிட்ட சொற்களைக் கொண்டு வர்ணிக்கும் அமைச்சர்களை வைத்துக்கொண்டு எவ்வாறு கல்வியை முறையாக முன்னெடுக்க முடியும்? எனவே பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிடம் அரசின் எம்.பிக்கள் வலியுறுத்த வேண்டும்.

எமது கட்சியில் இவ்வாறு யாரேனும் நடந்து கொண்டால், அவர்களை உடனே பதவியில் இருந்து நீக்குவோம் . தற்போது மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதை விடுத்து எம்.பிக்கள், அமைச்சர்களுக்குக் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் நடப்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருப்பதால், ஆங்கிலத்தில் பேச முடியாதவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.
இல்லையேல், ஆங்கிலத்தை கற்றுக்கொண்டு வந்து உரையாற்ற வேண்டும் . இது குறித்து, ஜனாதிபதியும் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என குறிப்பிட்டுள்ளார்.