ஐசிசி இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி: பரிசு தொகை பல மில்லியன் அமெரிக்க டொலர்
2022ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளது.
உலக கிண்ண கிரிக்கெட் போட்டி
இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.
இதில், சுப்பர் 12 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக பிரவேசிக்கவுள்ளன.
முதலாவது சுற்றில், ஏ குழுவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பி குழுவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, சிம்பாப்வே, ஆகிய அணிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பரிசு தொகைகள்
அதன்படி, ஐசிசி இருபதுக்கு 20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி வெற்றியீட்டும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறுதி போட்டியில் தோல்வியுற்று இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதேவேளை, அரையிறுதியில் வௌியேறும் அணிகளுக்கு தலா 4 இலட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுப்பர் - 12 சுற்றில் இடம்பெறவுள்ள 30 போட்டிகளில் வெற்றிப்பெறும் அணிகளுக்கு, ஒரு அணிக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்கள் என்றதன் அடிப்படையில் வழங்குவதற்கு 12 இலட்சம் அமெரிக்க டொலர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒதுக்கியுள்ளது.
இந்த 30 போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளுக்காகவே இந்த பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
அத்துடன், சுப்பர் - 12 சுற்றில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 70,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டுக்கான உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் முதலாவது சுற்றில் வெற்றி பெறும் அணிகளுக்கு தலா 40,000 அமெரிக்க டொலர்கள் என்றதன் அடிப்படையில் வழங்க 4 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
5.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
அதேபோன்று, முதலாவது சுற்றில் தோல்வியை தழுவும் அணிகளுக்கு 40,000 அமெரிக்க டொலர்கள் என்றதன் அடிப்படையில் வழங்க 1 இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலககிண்ண கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்கும் மற்றும் வெற்றிப்பெறும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள மொத்த பரிசுத்தொகைக்காக 5.6 மில்லியன் அமெரிக்க டொலரினை சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒதுக்கியுள்ளது.