துருக்கி - சிரியா எல்லையில் பாரிய நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 521 ஆக உயர்வு; 3,000 பேர் படுகாயம் (video)
துருக்கியின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 3,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
இன்று (06.02.2023) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக இன்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
நிலநடுக்கம் ஏற்பட்டதிலிருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது 6.7 ரிக்டர் என்றளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உறங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.
சிக்கியவர்களை மீட்க துருக்கி - சிரியாவின் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 521 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 3,000 பேர் படுகாயமடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கள்
துருக்கியில் 284 பேரும், சிரியாவில் 237 பேரும் என மொத்தம் 521 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.