யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் பொறுப்பற்ற பதிலால் குழப்பம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறும் வாள்வெட்டு வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவோர் தொடர்பில் தெரிந்த போதும் அவர்களை கைது செய்ய முடியவில்லை என யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் வாள்வெட்டு வன்முறை தொடர்பாக பொலிஸ் தரப்பிடம் வினவப்பட்டது.
இதன்போது, ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனை மிரட்டிய வன்முறை கும்பல் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வீட்டிற்கு முன்னால் வாள்களுடன் பயணித்த வன்முறைக் கும்பல் தொடர்பில் ஏன் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என அபிவிருத்தி குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள்
இந்நிலையில், யாழ். பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், "எமக்கு அவர்களைத் தெரியும் ஆனால் கைது செய்ய முடியவில்லை என பதிலளித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்,
”பொலிஸார் எவ்வாறு இப்படி பொறுப்பற்ற விதத்தில் பதில் கூற முடியும்? இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முடியாது.
அவர்கள் இங்கே தான் இருக்க வேண்டும். அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? உங்களுக்கு கீழே தான் கணினி குற்ற புலனாய்வு (சைபர் கிரைம்) இயங்குகிறது.
அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும். அல்லது குறித்த சந்தேக நபர் வசிக்கும் கிராம செயலாளரிடம் அவரது விவரங்களை திரட்டி அதன் ஊடாக அவர்களை கைது செய்ய முடியும்.
கைது நடவடிக்கை
இவ்வாறு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்ற போதிலும் ஏன் பொலிஸாரால் இதுவரை எவரையும் கைது செய்ய முடியவில்லை?
'ஆப்ரேஷன் சக்சஸ் பேசன்ட் டெத்' என்று கூறுவது போல் உள்ளது உங்களது பதில்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், "பொலிஸார் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டுமா? அப்படியாயின் பொலிஸ் திணைக்களம் ஏன் இயங்குகிறது?
வாள்வெட்டு கும்பல்கள் தொடர்பில் நீங்கள் இவ்வாறு பதிலளிக்க முடியாது. சம்பவம் இடம்பெற்று இவ்வளவு நாட்கள் தாண்டியும் ஏன் எவரையும் கைது செய்யவில்லை.
ஆட்களை தெரியும் கைது செய்ய முடியாது என்று கூறுவது பொலிஸ் தரப்பின் மீதே சந்தேகத்தை ஏற்படடுத்துகின்றது” என கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |