மன்னாரில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர்: வைத்தியசாலையில் அனுமதி
மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயங்களுடன் யாழ். மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தில் 38 வயதான, மூன்று பிள்ளைகளின் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, காயமடைந்தவர் யாழ்ப்பாணம் (Jaffna) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகின்றார்.
கூரிய ஆயுதங்கள்
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், கடந்த 23ஆம் திகதி பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும், தாக்குதல் நடத்தப்பட்ட தினம் வாள், கத்தி, இரும்பு மற்றும் கம்பி போன்ற கூரிய ஆயுதங்களுடன் 15இற்கும் மேற்பட்ட நபர்கள் வந்ததாகவும் குறித்த நபர்கள் கடும் போதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, குறித்த நபர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான முரண்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பகுதி மக்கள் வாள்வெட்டு நடத்திய நபர்களுக்கு எதிராக கையெழுத்திட்டு உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |