சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிட்சர்லாந்து சென்ற ஈழத்து யுவதியொருவர் மருத்துவராக சாதனை படைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த யுவதி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தனது 16 வயதில் கடந்து சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்துள்ளார்.
இதன் பின்னர் சுமார் ஒரு வருடத்தில் சுவிட்சர்லாந்து மொழியினை கற்றுக்கொண்டு 06 மாத காலம் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயின்றுள்ளார்.
குறுகிய கால சாதனை
இதனை தொடர்ந்து தனது இலட்சிய பாதையாக மருத்துவ துறையை தேர்ந்தெடுத்து தனது திறமைகளை வெளிக்காட்டி Basel பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தை நிறைவு செய்து இரண்டாம் வருட மருத்துவ கற்கை நெறியில் கால் பதித்துள்ளார்.
இவ்வாறு குறுகிய காலத்தில் மொழி அறிவில் தேர்ச்சி பெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று மருத்துவத்துறையில் கால் பதித்துள்ள இந்த யுவதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குறித்த யுவதியின் தாயார் வனஜா தமிழீழ நிழல் அரசின் மருத்துவப்பிரிவில் இறுதி வரை வைத்தியராக கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.