உலக சம்பியனை வீழ்த்தி வெற்றிபெற்ற சுவிட்ஸர்லாந்து! - சுவிஸ் மக்கள் கொண்டாட்டம்
ஐரோப்பா கிண்ண கால்ப்பந்து தொடரில் இன்று இடம்பெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் உலக சம்பியனான பிரான்ஸ் அணியை வீழ்த்தி சுவிட்ஸர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், பிரான்ஸ் அணியை வெற்றிகொண்டதும், சுவிஸ் நாட்டில் மக்கள் வெற்றிக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா மூன்று கோல்களை அடித்து சமநிலை பெற்றிருந்தது. பின்னர் இடம்பெற்ற பெனால்டி முறை ஆட்டத்தில் ஐந்திற்கு நான்கு என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் சுவிட்ஸர்லாந்து அணி தனது முதலாவது கோலை அடித்து கணக்கை துவங்கியது. எனினும், 57 மற்றும் 59வது நிமிடங்களில் பிரான்ஸ் அணியின் வீரர் கரீம் பென்ஸமா அடுத்தடுத்து கோல் அடித்து சுவிட்ஸர்லாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
பின்னர் 75வது நிமிடத்தில் மீண்டும் பிரான்ஸ் அணி கோல் அடிக்க அந்த அணி மூன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் முன்னிலை பெற்றது. எனினும், இறுதி நேரத்தில் சுவிஸ் அணி வீரர்களின் அசத்தல் ஆட்டத்தினால் 81 மற்றும் 90வது நிமிடங்களில் கோல் அடித்து போட்டியை சமநிலைப்படுத்தியது.
பின்னர் இடம்பெற்ற பெனால்டி முறை ஆட்டத்தில் ஐந்திற்கு நான்கு என்ற கோல் கணக்கில் சுவிட்ஸர்லாந்து அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.