கோவிட் தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடி! சுவிஸ் விமான சேவையின் 780 ஊழியர்கள் பணிநீக்கம்
கோவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி நிலையை அடுத்து சுவிஸ் விமான சேவை அதன் 780 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2019ம் ஆண்டு இறுதி பகுதியில் சீனாவில் அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்று தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் பெரும் பாதிப்பின எதிர்நோக்கியுள்ளதுடன், பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
தற்போது வரையில் 15 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உலகம் முழுவதும் 32 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்றினால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உலக நாடுகளின் முன்னணி விமான சேவைகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இந்நிலையிலேயே, சுவிஸ் விமான சேவை அதன் 780 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 500 மில்லியன் பிராங்குகள் இழப்பை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் விமான சேவை நிதி வீழ்ச்சியடைவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
அத்துடன். 1,000 ஊழியர்களைக் குறைப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தது. எனினும், பணிநீக்கம் இல்லாமல் 2020 ஆம் ஆண்டில் சர்வதேச பயணத்தை நிறுத்திய கோவிட் -19 தொற்றுநோய் விமான நிறுவனத்திற்கு பேரழிவாக அமைந்துள்ளது.
பணி நீக்கம் செய்யப்படும் 780 ஊழியர்களில் 650 பேர் முழு நேர ஊழியர்கள் எனவும், இதில் சுமார் 200 தரை ஊழியர்கள் எனவும், 60 தொழில்நுட்ப வல்லுநர்கள், 400 கேபின் குழுவினர் மற்றும் 120 பணியாளர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணியாளர்கள் நீக்கத்துடன், பல விமான சேவையின் வழித்தடங்களையும், விமானங்களையும் குறைப்பதற்கு சுவிஸ் விமான சேவை முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.