தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கின்ற சுவிஸ் தூதரக முயற்சி இடைநிறுத்தம்
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட சந்திப்பு இப்போது காலவரையறை குறிப்பிடாது தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற இருந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒவ்வொருவருக்கும் இந்த முயற்சி இடைநிறுத்தப்பட்டிருப்பது பற்றிய தகவல் இன்று காலை முதல் சுவிஸ் தூதரக அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டதாக உறுதிப்படுத்த முடிந்தது.
சற்று முன்னர் யாழில் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் இளைஞன் மீட்பு - வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார்
தற்காலிகமாக நிறுத்தம்
தமிழர் தரப்புக்கள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்தும் சுவிஸ் தூதரக முயற்சி ஒரு புறம் நடக்க, அதற்குச் சமாந்தரமாக மறுபுறத்தில் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றவிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் தாமும் உள்ளடங்கிய தமிழ்த் தேசிய பேரவையின் பெயரில் அதேபோன்ற கூட்டம் ஒன்றை 19 ஆம் திகதிக்கு முன்னர் 15 ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முயற்சி எடுத்த பின்னணியில் - அது பற்றிய செய்தி விலாவாரியாக இன்று காலை வெளியான சூழலில் - தன்னுடைய முயற்சியை உடனடியாக இடைநிறுத்தம் தீர்மானத்தை சுவிஸ் தூதரகம் மேற்கொண்டதாக அறியவருகின்றது.

அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக பல டசின் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் 15 ஆம் திகதி தாம் நடத்த உத்தேசித்த கூட்டத்துக்குத் தமிழ்த் தேசிய பேரவை அழைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியை சுவிஸ் தூதரகம் சத்தம் சந்தடி, குழப்பமின்றி முன்னெடுக்க விரும்பிய சூழலில் அது பற்றிய செய்திகள் வெளியானமை சுவிஸ் தூதரகத்தை விசனத்துக்குள் தள்ளி இருப்பதாகவும் அறியவந்தது.