பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த சுவிஸ் தூதரக பணியாளர் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தாம் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ், இன்று ஆரம்ப ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
இலங்கை அரசாங்கத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதற்காக பொய்யான தகவல்களை வழங்கியதாகவும், தனது கடத்தல் கோரிக்கையில் பொய்யான ஆதாரங்களை உருவாக்கியதாகவும் கனியா பன்னிஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி கொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில், வெள்ளை வாகனத்தில் வந்த ஐவர், தம்மை கடத்திச் சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் பொய்யான சாட்சியங்களை புனைந்ததாக சட்டமா அதிபர், அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை சவால் செய்யும் வகையில் ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்பினார்.
நீதிமன்ற உத்தரவு
மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இந்தநிலையில் அடுத்த விசாரணைத் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமான
சமர்ப்பிப்புகளை சமர்ப்பிக்குமாறு தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.