மனோ கணேசனை சந்தித்த சுவிட்சர்லாந்து தூதுவர்
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை (Mano Ganeshan) சுவிட்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Siri Walt) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பானது, இன்றையதினம் (21.05.2024) மனோ கணேசனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மனோ எம்பி தனது 'X' தளத்தில் குறிப்பிடுகையில்,
இதன்போது, நல்லிணக்கம், பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு மற்றும் மலையக சமூகத்தை சார்ந்த பெருந்தோட்ட பிரிவினரின் வாழ் நிலைமை தொடர்பாக சுவிட்சர்லாந்து தூதுவருடன் கலந்துரையாடியுள்ளேன்.
உலக சமுதாய கொள்கைகள்
உண்மை, ஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய மசோதா மூலம் அரசு கொண்டுவர முயலும் உண்மை ஆணைக்குழு பற்றியும் கலந்துரையாடினோம்.
ஆனால், அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் ஆகிய இரண்டு விடயங்களிலும் எவ்வித அர்த்தபூர்வ முன்நகர்வும் அரசாங்க தரப்பில் செய்யப்படாத காரணத்தால், நல்லிணக்கம் இன்னமும் சாத்தியம் ஆகவில்லை.
இவை இத்தனை தூரம் இழுப்பட்டு போவதற்கு சர்வதேச சமூகமும் காரணமாக அமைந்து விட்டது. ஆகவே, இலங்கை தொடர்பான இதுவரையிலான உலக சமுதாய கொள்கைகளை மீளாய்வு செய்யுங்கள் என நான் கோரியுள்ளேன்.
அதிகார பகிர்வு அனுபவங்கள்
மேலும் மலையக தமிழ் மக்கள் இந்நாட்டில், இந்நாள் வரை இழந்த அரசியல் சமூக சமூக உரிமைகளை மீளப்பெற சுவிட்சர்லாந்து எமக்கு உதவ வேண்டும்.
மலையக தமிழர் இந்நாட்டில் சுமார் 12 மாவட்டங்களில் பரந்து வாழும் சிறுபான்மையினர் என்ற படியால், அரசியல் யாப்பு ஏற்பாடாக நிலவரம்பற்ற சமூக சபை அமைக்கப்பட வேண்டும் என நாம் முன்மொழிவு செய்து வருகிறோம்.
இந்த எமது முன்மொழிவுகள் செம்மையாக்கப்பட வேண்டும். அதற்காக, சுவிட்சர்லாந்து நாட்டின் நிலவரம்பற்ற சிறுபான்மையினருக்கு வழங்கபட்டுள்ள அதிகார பகிர்வு அனுபவங்களை பகிர்ந்துகொள்ள நாம் விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |