சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் பெயரை மாற்றுவது சட்டவிரோதமானது – ஹர்ஷ
சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் பெயரை மாற்றுவது சட்டவிரோதமானது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
1990 அவசர ஆம்புலன்ஸ் சேவையின் சுவசெரிய “SuwaSeriya” என்ற பெயர் மாற்றப்பட வேண்டுமெனில், அதற்காக சட்டம் திருத்தப்பட வேண்டும் மற்றும் தேவையான அங்கீகாரங்கள் பெறப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஒரு பத்திரிகை விளம்பரத்தை மேற்கோள் காட்டி அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுவசெரிய என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது போலத் தெரிகிறது; அதோடு இலச்சினையும், நிறங்களும் கூட மாற்றப்பட்டுள்ளன — குறைந்தபட்சம் ஆவணங்களில் இவ்வாறு மாற்றப்பட்டதாக தென்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
“இது இப்போது அதிகாரப்பூர்வமா? ‘சுவாசிரியா’ பெயர் நீக்கப்பட்டு, அதன் அடையாள நிறங்களும், சின்னமும் மாற்றப்பட்டுவிட்டதா? ‘1990 Sri Lanka Emergency Medical Service’ எப்போது நிறுவப்பட்டது? எந்தச் சட்டத்தின் கீழ்? அதன் நோக்கம் என்ன? இது ‘அவசர மற்றும் மருத்துவமனைக்கு முன் வழங்கப்படும் சிகிச்சை சேவை’ என்று குறிப்பிடுகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் 2018ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 2018ம் ஆண்டு 18ம் இலக்க சுவசெரிய சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சேவை முழுமையாக ‘மருத்துவமனைக்கு முன் சிகிச்சை’ வழங்கும் ஆம்புலன்ஸ் சேவையாகும்,” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்தச் சட்டத்தின் படி, சுவசெரிய சேவை மருத்துவமனைக்குள் நோயாளிகளை எடுத்துச் செல்ல முடியாது, அதுவும் அவசர நிலையிலும் கூட. ஆகவே, இதன் நோக்கம் ‘மருத்துவமனைக்கு முன் அவசர சிகிச்சை வழங்குதல்’ என்பதே தொடர வேண்டும். அதில் மாற்றம் செய்ய நினைத்தால், சட்டமும் மாற்றப்பட வேண்டும், தேவையான அங்கீகாரங்களும் பெறப்பட வேண்டும்,” என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.



