தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்..! பத்தேகம விவகாரத்தில் பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
செப்டம்பர் மாதம் பத்தேகமவில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய பொலிஸார் பொதுமக்கள் உதவியைக் கோரியுள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று(08.11.2026) வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, செப்டம்பர் 27, 2026 அன்று, காரில் வந்த இருவர், முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் மீது T-56 ரக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பத்தேகம பொலிஸார் மற்றும் எல்பிட்டிய கோட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் மூலம், இந்தச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் என இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
இந்தச் சந்தேக நபர்கள் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், இதுவரையில் அவர்களை கைது செய்ய முடியவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

இதற்கமைய, லத்து கொலித யசரத்ன டி சொய்சா (50) - கெகில்ல மண்டிய, பூஸா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் வத்துதுர புத்தி மதுசங்க குணசிரி (35) - ராஜாஹெனவத்த, சுதுமெட்டிய, தொடந்துவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், பொறுப்பதிகாரி (OIC), பத்தேகம பொலிஸார் : 071-8591480 பத்தேகம பொலிஸ் நிலையம்: 091-2292222 ஆகிய தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS VIDEO
பல ஆண்டுகளாக ஒலித்த பிக்பாஸ் குரல் நிறுத்தம்... ஜுனியர் பிக்பாஸாக மாறிய போட்டியாளர்! தலைகீழாக மாறிய ஆட்டம் Manithan