இலங்கையில் சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது! மேலும் பலருக்கு வலைவீச்சு
சர்வதேச பொலிஸ் அமைப்பான “இன்டர்போல்” இலங்கை பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்துக்குரியவர்களும் வெளிநாடுகளின் தீவிரவாதிகளும் இதில் அடங்குவதாக இன்டர்போல் அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒபரேஷன் ஃப்ளைகேட்சர் II (Operation Flycatcher II) என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட (2021 நவம்பர் 8-12) ஐந்து நாள் நடவடிக்கையின்போதே இந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், உலகளவில் மேலும் கைதுகள் விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக இன்டர்போல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு முன்னர், இலங்கையின் காவல்துறையினர் எல்லை மற்றும் குடிவரவு முகவர் நிலைய அதிகாரிகள் மத்தியில் தடயவியல் அடையாள நுட்பங்கள் மற்றும் திறன்கள் தொடர்பான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
INTERPOL இன் தரவுத்தளங்களில் சுமார் 135,000 வெளிநாடுகளின் தீவிரவாதிகள் பற்றிய விவரங்கள் உள்ளதாக அந்த அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் கிரிகோரி ஹிண்ட்ஸ் (Gregory Hinds) கூறியுள்ளார்.
இந்தநிலையில், இலங்கையில் பயணிக்கும் தீவிரவாத சந்தேக நபர்களை, கண்டறிவதற்காக தேசிய ரீதியில் செயற்படும் விதத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, இன்டர்போலுடன் இணைந்த நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய தலைமை காவல்துறை பரிசோதகர் லக்ஷ்மன் ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளின்போது, கொழும்பில் உள்ள இலங்கைக்கான இன்டர்போல் தேசிய மத்திய பணியகம் இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) குற்றப் பதிவுத் துறை (CRD) சிஐடியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் சிறப்பு அதிரடிப்படை அரச புலனாய்வு சேவை (SIS) என்பன இணைந்துக்கொண்டன.



