ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு அபராதம்
ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று (01.4.2026) கைது செய்யப்பட்டு, (02) இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, சந்தேக நபர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் ரூ. 91,100 அபராதத்தையும், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான தொகையையும் செலுத்த வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அபராதம்
குற்றம் சாட்டப்பட்டவர் நல்லதண்ணி ஸ்ரீ பாத வீதியில் உள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்தமையால் வனப்பகுதியில் சுமார் 5 ஏக்கர் பகுதி தீயில் அழிந்துள்ளது.

ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகள், மாஸ்கெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி பொலிஸ் அதிகாரிகள் இணைந்து குறித்த தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மலையகத்தில் நிலவும் வெப்பமான காலநிலையால் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
காடுகளுக்குத் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக, பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஹட்டன் வனபாதுகாப்புத் அலுவலகத்தின் வன அதிகாரி, திரு. வி.ஜே.ருக்ஷன் தெரிவித்துள்ளார்.