தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டனில் திடீர் சோதனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரிலுள்ள உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இன்று (31) திடீர் சோதனைகளை முன்னெடுத்தனர்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்குச் சுத்தமானதும், பாதுகாப்பானதுமான உணவுப் பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேசத்தின் ஏனைய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் இந்தச் சோதனையை நடத்தியது.
திடீர் சோதனை
இதன்போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியானதும், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்றதுமான பெருமளவு உணவுப் பொருட்களைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றி அழித்தனர்.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தை மீறி உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் வர்த்தக நிலையங்களைப் பராமரித்தமை தொடர்பில் பல வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.













