திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் திறந்து வைப்பு
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்தி அப்பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் பொருட்டு அவ்வைத்தியசாலையில் புதிதாக சத்திர சிகிச்சைக்கூடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சத்திர சிகிச்சைக் கூடத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (14) திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.மசூத் தலைமையில் இடம்பெற்றது.
சத்திர சிகிச்சைக்கூடம் திறந்து வைப்பு
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சத்திர சிகிச்சைக்கூடத்தினை திறந்து வைத்தார்.
இதன்போது பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் சட்டத்தரணி கே.ஜெகசுதன் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அடிப்படைத் தேவை
இந்நிகழ்வின் போது பிராந்திய பணிப்பாளர் உரையாற்றுகையில், இந்த சத்திர சிகிச்சைக்கூடமானது சுகாதார அமைச்சினதும் பொதுமக்களினதும் நிதியுதவியின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சைக் கூடமானது ஆதார வைத்தியசாலையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.
சுகாதார சேவையில் அதன் பங்களிப்பு மிக முக்கியமானதாக உள்ளது.இந்த சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு தேவையான பெறுமதிமிக்க உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற தாதிய உத்தியோகத்தர் நியமனத்தின் போதும் அதிகமானவர்களை இங்கு நியமதித்துள்ளோம். அதிலும் விசேடமாக சத்திர சிகிச்சை கூடங்களில் வேலை செய்தவர்கள், விசேட பயிற்சி பெற்றவர்கள் என அனுபவமிக்க மிகவும் திறமையானவர்கள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.






