குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் சலே
தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருக்கும் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தற்போதும் உணவை உட்கொள்ள மறுத்து வருவதாகவும், அவருக்கு சேலைன் ஊடாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
உணவை உட்கொள்ளுமாறு அவரது மனைவி, பிள்ளை மற்றும் சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ள போதிலும், சுரேஷ் சலே அக்கோரிக்கைகளை நிராகரித்துள்ளார்.
உணவு தவிர்ப்பு போராட்டம்
இதேவேளை, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாலை வைத்தியசாலைக்கு சென்று அவரிடம் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த சுரேஷ் சலே, உணவு மற்றும் நீரை உட்கொள்ள மறுத்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவே, நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.