சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கை நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பான சுரேஷ் சலேவுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
இதற்கு முன்னரான வழக்கு விசாரணையின் போது கடந்த நூறு நாட்களாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் சலேயின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய வழக்கு விசாரணையின் போது குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனைக்கருத்திற் கொண்ட நீதிபதி பசன் அமரசேன, மருத்துவ அறிக்கைகள் தொடர்பான விபரங்களை வழங்குவதற்காக 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அறிவித்தல் விடுத்ததுடன், வழக்கு விசாரணையை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையே நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கை பிற்பகல் சுமார் 3:15 மணியளவில் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.