சுரேஷ் சலே கைது! பின்னணியில் மறைந்துள்ள உண்மைகளை கோரும் கத்தோலிக்க திருச்சபை
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்சலே கைது செய்யப்பட்டமையைக் கத்தோலிக்க திருச்சபை வரவேற்றுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் கத்தோலிக்க திருச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தீவிர விசாரணைகள்
உயிர்த்த ஞாயிறு தினத் குண்டுத் தாக்குதல் சம்பவம் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விரிவான விசாரணைகளின் அடிப்படையில், சுரேஷ் சலே நேற்று பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

தற்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தக் கைது நடவடிக்கை குறித்து கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ சர்வதேச ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
சரியான திசையில் விசாரணை தொடர்கின்ற அறிகுறி
இந்தக் கைது நடவடிக்கையானது, விசாரணைகள் சரியான திசையில் தொடர்கின்றன என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாகும்.

எமக்குத் தேவையானது ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மறைந்துள்ள உண்மைகளே தவிர வெறும் கைதுகள் மாத்திரமல்ல. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் எனக் கத்தோலிக்க திருச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.