பிரகீத் எக்னெலிகொட வழக்கில் அதிரடி திருப்பம் - சாட்சியாக அழைக்கப்படவுள்ள சுரேஷ் சலே..!
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான துவான் சுரேஷ் சலேவை முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியாளராக எதிர்வரும் வழக்கு விசாரணைத் தினத்தில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இதனை முறைப்பாட்டுத் தரப்பு நேற்று (09) மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமுக்கு அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மீண்டும் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பான வழக்கின் நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் குமார் எனப்படும் முரளியின் சாட்சியத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை நேற்று(9) கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி நயனா செனவிரத்ன மற்றும் நீதிபதிகளான நலின் ஹேவாவசம், லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூலை 24ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரச தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, வழக்கின் நான்காவது சாட்சியாளரின் வாக்குமூலத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
எனினும், அந்த ஆட்சேபனைகளைப் பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஒருமனதாக உத்தரவு பிறப்பித்து, சுமதிபால சுரேஷ் குமார் எனப்படும் முரளியின் சாட்சியத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்தது.
எதிர்த்தரப்பினரால் மேன்முறையீடு கடந்த வழக்கு விசாரணையின்போது, எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர்.
பொய்யான சாட்சியங்கள்
அந்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி, மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்து தீர்ப்பு வழங்கும் வரை மேல் நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது என அவர்கள் வாதிட்டிருந்தனர்.
எனினும், வழக்கு தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவைச் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் குழாம், கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி நான்காவது சாட்சியாளரின் வாக்குமூலத்தை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தொடர்வதாக அறிவித்திருந்தது.
இந்த வழக்கின் நான்காவது சாட்சியான சுமதிபால சுரேஷ் குமார் எனப்படும் முரளி, நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது, வழக்கின் முதலாவது பிரதிவாதியான ஷம்மி குமாரரத்ன பல சந்தர்ப்பங்களில் தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகத் தெரிவித்திருந்தார்.

வழக்கு தொடர்பில் பொய்யான சாட்சியங்களை வழங்குமாறு தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நேற்றைய தினம் வழக்குக்காக ஒதுக்கப்பட்ட நேரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சாட்சியத்தின் எஞ்சிய பகுதியைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
மேலும், சாட்சிய எண்கள் 53 மற்றும் 98 தொடர்பாகச் சாட்சியாளர்களை அழைப்பதற்கான அறிவித்தல்களைப் பிறப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கமைய, மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேவையும் சாட்சியாளராக எதிர்வரும் வழக்கு விசாரணைத் தினத்தில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.