இந்திய இழுவைமடிப் படகு பிரச்சினை: சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை
இந்திய இழுவைமடிப் படகு தொடர்பான பிரச்சினைக்கு கடல் காவலர்கள் எனும் பெயரில் புதிய படையணியை உருவாக்குவது முரண்பாடுகளை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக
யாழ். ஊடக அமையத்தில் இன்று (20.03.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியது அவசியம். இந்தியாவின் துறைசார் அமைச்சுடன் பேசி இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் தீர்வு காணப்பட வேண்டும்.
ஆரோக்கியமற்ற செயற்பாடு
அதனை விடுத்து, கடல் காவலர்கள் எனும் குடியியல் தன்னார்வ படையை உருவாக்கி தமிழக கடற்றொழிலாளர்ளுடன் மோதவிடுவது ஆரோக்கியம் அல்ல.
இது இரு நாட்டு கடற்றொழிலாளர்களிடமும் முரண்பாட்டை ஏற்படுத்தும். இலங்கை கடற்படையை நல்லவராக்கி இலங்கை கடற்றொழிலாளர்களை கெட்டவர்களாக காட்டும் எண்ணமோ என்ற அச்சம் காணப்படுகிறது.
இவ்வாறு நடந்தால் இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தமிழக கடற்றொழிலாளர்களின் போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு எதிரானதாக திரும்பும். குறித்த பிரச்சினையை ஜனாதிபதியும் கடற்றொழில் அமைச்சரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தேவையற்ற குழப்பம்
இந்த பிரச்சினையை கடற்றொழிலாளர்களிடம் கையளித்தால் தேவையற்ற குழப்பம் ஏற்படும். கடற்படை செய்யவேண்டிய வேலையை சிவில் அமைப்பிடம் வழங்குவதை நாம் விரும்பவில்லை.
அத்துடன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தை மீளப்பெற வேண்டும். குறித்த விடயத்தின் ஆழத்தை புரிந்து கடற்றொழிலாளர் சங்கங்கள் இதனை எதிர்க்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |