ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
நிதியமைச்சர் என்ற ரீதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மற்றும் பஃப்ரல் நிறுவனம் ஆகிய அமைப்புகள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் குறித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 09 ஆம் திகதி திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் அடிப்படை மனித உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம்
அதன்படி, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்டிருந்ததன் பிரகாரம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 11.04.2023 அன்று அநிவித்தது.
தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு விளக்கமளித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் தொடரும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.