ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
அண்மையில் கர்நாடக மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் ஆடைகளை அணியக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக மேல் நீதிமன்றம், பாடசாலை நிர்வாகத்துக்கு சார்பாக தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பின்படி, ஹிஜாப் ஆடையை நீதிமன்றம் தடை செய்திருந்தது.
மனுத்தாக்கல்
இதனைடுத்து மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பை ஆட்சேபித்து, இந்திய உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றிருந்தது.
இதன்படி உயர்நீதிமன்ற நீதியரசர்களான ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா ஆகியோர் தமது தீர்ப்புக்களை அறிவித்தனர்.
இதன்போது நீதியரசர் ஹேமந்த் குப்தா, ஹிஜாப் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்யும் உத்தரவை பிறப்பித்தார்.
நீதியரசர் சுதான்சு துலியா, ஹிஜாப் அணிய தடைவிதித்த கர்நாடக அரசாங்கத்தின் அரசாணையை இரத்து செய்ய உத்தரவிட்டார்.
தலைமை நீதியரசருக்கு பரிந்துரை
அத்துடன் இரண்டு நீதியரசர்களும் இந்த வழக்கின் உரிய நடவடிக்கையை தலைமை நீதியரசருக்கு பரிந்துரைப்பதாக அறிவித்தனர்.
இரண்டு நீதியரசர்களும் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து இந்த விடயம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று எதிர்பார்க்கப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பை வழங்குவதில் உயர் நீதிமன்றம் தவறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.