தவறுகளை தட்டிக்கேட்டால் அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது: ரிஷாட்
அரசாங்கம் இழைக்கும் தவறுகளை ஜனநாயக வழியில் தட்டிக்கேட்கும்போது, அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அடக்குமுறை பிரயோகிக்கப்படுவதாகவும், இதனை நிறுத்தி மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வவுனியா, சாளம்பைக்குளத்தில் நேற்று (05.02.2023) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஆட்சியாளர்கள் நாட்டின் பொருளாதாரத்தின் நிலையை மாற்றியதனால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்று மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள்
மக்கள் எதிர்நோக்குகின்ற கஷ்டங்களை வெளிப்படுத்துவதற்காக வீதியிலிறங்கி, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுக்கின்றபோது, அவர்களை அடக்கி, ஒடுக்கி மிக மோசமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
மக்களுடைய ஜனநாயகக் குரல் இவ்வாறு நசுக்கப்படுகின்றபோது, எதிர்காலத்தில் நாட்டிலே பாரிய ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற ஐயம் நிலவுகின்றது.
மக்கள் நல திட்டங்கள்
எனவே, ஆட்சியாளர்கள் நாட்டு மக்களுடைய உண்மையான நிலையை உணர்ந்து, தற்பொழுது முன்னெடுத்துச் செல்கின்ற நடவடிக்கைகளை நிறுத்தி, மக்களுடைய நலனுக்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டும் என்று வேண்டுகின்றோம்.

உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் கூட மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மாணவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோன்று, இன்னும் எத்தனையோ விடயங்களில் அரசாங்கம் தவறிழைத்துக்கொண்டிருக்கின்றது.
இவற்றையெல்லாம் ஜனநாயக ரீதியில் தட்டிக்கேட்கும்போது, அவர்களுக்கு எதிராக மிக மோசமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
அவற்றை பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக இருக்கின்றது" என தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam