பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு ஆதரவு: நிதானப்போக்கை கடைபிடிக்க வலியுறுத்தும் சீனா
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சருமான இசாக் டாருடன் தொலைபேசியின் ஊடாக கலந்துரையாடியுள்ளார்.
காஸ்மீர் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றங்கள் குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அரசியல் குழுவின் உறுப்பினரான வாங்கிடம், பாகிஸ்தானின் அமைச்சர் டார் விளக்கியுள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்தும் உறுதியாகவும் போராடி வருகிறது.
பாகிஸ்தானின் முடிவு
அதேநேரம், நிலைமை மோசமடைய வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் எதிராக இருப்பதாகவும் டார் வலியுறுத்தினார்.
இந்தநிலையில், நிலைமையை நிதானத்துடன் கையாள்வதற்கு, பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளதாக அவர் இந்த கலந்துரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானிய அமைச்சரின் கருத்துக்களை செவிமடுத்த சீனா பிரதமர், இந்த முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது முழு உலகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என்றும், குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு இரும்புக் கவச நண்பரான பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு நிலைமைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, அந்த நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் தமது நாடு முன்னிற்கும் என்று வாங் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த விடயத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானமாக, நிலைமையை தணிக்க ஒன்றிணைந்து செயல்படமுடியும் என்று சீனா நம்புகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.