மாகாணசபை தேர்தலுக்கான முயற்சிகள் தோல்வியடைய சுமந்திரனே காரணம்: விஜேதாச ராஜபக்ச
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனே காரணம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று (19.03.2024) முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதம் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் விவாதத்தில் கலந்துரை கொண்டு உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், நாட்டின் அரசியலமைப்புக்கு எதிராக சபாநாயகர் செயல்பட்டுள்ள விதம் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.
மாகாணசபை தேர்தலுக்கான சட்டத் திருத்தம்
சுமந்திரனை தொடர்ந்து உரையாற்றிய போதே அமைச்சர் விஜேதாச ராஜபக்ச இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மாகாணசபைத் தேர்தலை நடத்த முழுமையான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு குறித்த திருத்தச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தேன்.
அத்தருணத்தில் பிரதமராக இருந்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தங்களை கொடுத்து திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை சுமந்திரன் கொண்டுவந்ததால் இன்று ஒட்டு மொத்தமாக நாட்டு மக்களுக்கு மாகாண சபைத் தேர்தல் இல்லாது போயுள்ளது.
இதற்கு பொறுப்புக் கூற வேண்டிய முதலாவது நபர் சுமந்திரனே என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட சுமந்திரன், அத்தருணத்தில் நான் எதிர்க்கட்சியில் தான் இருந்தேன். நீங்கள் தான் அமைச்சரவையில் இருந்தீர்கள். மாகாணத் தேர்தல் நடைபெறாமல் இருப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். நான் சாதாரண எதிர்க்கட்சி உறுப்பினர் மாத்திரமே என குறிப்பிட்டுள்ளார்.
you may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |