முல்லைத்தீவு மனித புதைகுழி! உண்மையை மறைக்க முயலும் அரசாங்கம்:சுமந்திரன் குற்றச்சாட்டு(Video)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கை முறைப்படி செய்ததாக தெரியவில்லை. சர்வதேச ரீதியில் இது எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நியதிகள் உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அகழ்வு பணிகளை பார்வையிட்ட பின்னர் சம்பவ இடத்தில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நியதிகள்
மேலும் கூறுகையில்,''அகழ்வு நடவடிக்கை முறைப்படி செய்ததாக தெரியவில்லை. இங்கு வைத்தியர் இருந்தாலும் கூட சர்வதேச நியதிகள் எதுவும் இங்கு பின்பற்றப்படுவதாக தெரியவில்லை.
சாதாரணமாக ஒரு புதைகுழியில் ஒரு மனித உடலினை தோண்டி எடுத்து செய்கின்ற பரிசோதனைக்கும் பல சடலங்கள் உள்ள மனித புதைகுழியாக இருக்கின்ற ஒருபகுதி தோண்டப்பட்டு எடுப்பதற்கும் நிறைய
வித்தியாசங்கள் உண்டு. இதனை செய்வதற்காக சர்வதேச நியதிகள் ஏராளமாக இருக்கின்றன.
படிப்படியாக அதனை அணுகி முறையினை ஒழுகி செய்ய வேண்டும். இங்கு அப்படியாக செய்யபடுவதாக தெரியவில்லை.
நேற்று மன்னார் நீதிமன்றிலும் மன்னார் மனித புதைகுழி தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
மூடி மறைப்பது தான் நோக்கம்
இந்த எல்லா விடயங்களிலும் திருப்திகரமான முறையில் அகழ்வுகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. இது இந்த நாட்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் இவ்வாறான தகவல்கள் சாட்சியங்கள் வருகின்ற போது அது மிகவும் கவனமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் அகழ்வுகள் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு எதேச்சியகரமாக செய்வதும், செய்கின்ற இடங்களில் வைத்தியர்கள் தொழில் செய்கின்றவர்கள் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றனர்.
சிலவேளைகளில் நீதவான்கள் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றார்கள். ஆகையால் இதில் இருந்து உண்மையினை கண்டறிவதற்கு அரசிற்கு முழுமையான மனதில்லாமல் இருப்பதும் இன்னும் ஒருபடி மேல் சொன்னால் அவற்றை மூடி மறைப்பதும் தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.‘'என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |