முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளது சடலங்களா..! வலுக்கும் சந்தேகங்கள் - பாதுகாப்பு தீவிரம் (Video)
இன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேநேரம் பிளாஸ்ரிக் பொருள், வையர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலதிக அகழ்வு பணிக்காக தற்காலிக அணைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
வருகின்ற வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
செய்தி- ஆஷிக்
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு-கொக்குத்தொடுவாய் பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி சட்டதரணி எம்.ஏ சுமந்திரன் களத்திற்கு சென்றுள்ளார்.
இதேவேளை அங்கு பொது மக்கள் அதிகளவானோர் சென்றுள்ளதாகவும் அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அப்பகுதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பெண்கள் என அடையாளப்படுத்தக்கூடிய மூன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
மேலும் குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலான சட்டத்தரணிகள்,பொலிஸார்,விசேட அதிரடிபடையினர்,சோகோ பொலிஸார்,மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகளது சடலங்கள் புதைக்கப்பட்ட பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வு பணி இன்று(06.07.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில், பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் நீதிபதி முன்னிலையில் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள், இராணுவத்திடம் சரணடைந்த பெண் போராளிகளுடையதா? அல்லது சரணடைந்த விடுதலைப் புலிகளினுடையாதா, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினுடையதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக தகவல்-கீதன்