செம்மணி அகழ்வில் மீட்கப்படும் என்புத் தொகுதிகள்- சோதனை கூடங்களுக்கு அனுப்புமாறு சுமந்திரன் வலியுறுத்தல்
செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தும் இதுவரையில் அனுப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் மீதான நடவடிக்கையை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
என்புத் தொகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணியில் இன்றைய தினத்தோடு அதிக எண்ணிக்கையான என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மனிதப் புதைகுழியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது.

இதற்கு முன்னர் மன்னர் மாவட்டத்தில் உள்ள சதோசா மனித புதைகுழியில் 376 மனித என்புத் தொகுதிகள் அகழந்து எடுக்கப்பட்டிருந்தன.
தற்போது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகளையும் அதிகூடிய நிபுணத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் அல்லது பரிசோதனை கூடங்களில் அறியத்தர வேண்டும் என நாங்கள் கோரியிருந்தோம்.
அதற்கான உத்தரவுகளையும் நீதிமன்றம் வழங்கியிருந்தது. என்புத் தொகுதிகளை அகழ்ந்து எடுப்பது என்பது ஒரு ஆரம்பகட்ட விடயம். ஆனால் அதனை விட பிரதானமானது அகழ்ந்து எடுக்கப்படும் என்புத் தொகுதிகள் யாருடையது என அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை என்றார்.
