படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19ஆவது ஆண்டு ஞாபகார்த்த நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, நேற்று(24) திருகோணமலை உவர்மலை லோவெர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வானது வடக்கு கிழக்கு ஊடக அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மகஜர் கையளிப்பு
இதன்போது, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் குறித்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தொடர்பாக நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஊடக அமைப்புகள் சார்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி, காணாமல் ஆக்கப்பட்டு கடத்தப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விசாரணைகளை துரிதமாக முன் நகர்த்த வேண்டியும், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் அருள் ராஜாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜரில்,
படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கை
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அன்னாரின் 19 ஆவது ஞாபகார்த்த தினத்தை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம், முல்லைத்தீவு ஊடக அமையம், மன்னார் ஊடக அமையம், அகம் மனிதாபிமான வள நிலையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், இணைய ஊடகச் செயற்பாடு (IMA) வடக்கு - கிழக்கு - தெற்கு ஊடக அமைப்புக்கள், பிரதேச சிவில் வலையமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண் மனித உரிமை பாதுகாவலர்கள் வலையமைப்பு, பாதிக்கப்பட்ட மக்கள் ஆகிய நாங்கள் 24 ஜனவரி 2025 ஆகிய இன்றையதினம் திருகோணமலை மாவட்டத்தின் உவர்மலை லோவர் வீதியில் அமைந்துள்ள உவர்மலை பூங்காவடியில் ஒன்று கூடி மேற்கொண்டதுடன், படுகொலை செய்யப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய எமது ஏகோபித்த கோரிக்கையினை தங்களுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
இலங்கையின் ஊடகத்துறை வரலாறு பல்வேறு கொலைகளையும், கொடுமைகளையும், அச்சுறுத்தல்களையும், நெருக்கடிகளையும் உள்ளடக்கியதாகவே கடந்து போயிருக்கிறது.
அவ்வாறானவைகள் இனிவரும் காலங்களிலேனும் இல்லாதிருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஊடகப் பணியை, நேர்மையாக முன்னெடுப்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையிலேயே கடந்த யுத்த காலங்களில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் பலர் தமது உயிரைக்காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதற்குமப்பால் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதுடன், காணாமலாக்கப்பட்டும், பலர் உயிரைப் பாதுகாப்பதற்காக ஊடகப் பணியை விட்டொதுங்கியதுடன் பலர் நாட்டைவிட்டு புலம்பெயர்ந்து தப்பியோடி தஞ்சமடைந்திருக்கின்றனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்தும் குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட எமது ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்கப் பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.
இலங்கையின் வடக்கு கிழக்கில் 41க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் கடந்த தசாப்தத்தில் கொல்லப்பட்ட 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்.
ஐயாத்துரை நடேசன், தராக்கி த.சிவராம், எல்.எம்.பலீல் (நற்பிட்டிமுனை பலீல்), சுப்பிரமணியம் சுகிர்தராஜன், சின்னத்தம்பி சிவமகாராஜா, சுப்பிரமணியம் ராமச்சந்திரன், சந்திரபோஸ் சுதாகர், செல்வராசா ரஜீவர்மன், இசைவிழி செம்பியன் (சுபாஜினி), பரணி ரூபசிங்கம் தேவகுமார், இராசையா ஜெயேந்திரன், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, மகாலிங்கம் மகேஸ்வரன், மாரியப்பு அந்தோணிகுமார், ஷோபனா தர்மராஜா (இசைப்பிரியா), மற்றும் சகாதேவன் நிலக்சன் உள்ளிட்டவர்கள் 2004-2010 வரையான காலப்பகுதியில் கொல்லப்பட்டதுடன் அதே காலப்பகுதியில் திருகுலசிங்கம் தவபாலன், பிரகீத ஆகிய ஊடகவியலாளர்கள் காணாமலும் ஆக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம், யாழ் ஊடக அமையம், வவுனியா ஊடக அமையம், கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒன்றியம், முல்லைத்தீவு ஊடக அமையம், மன்னார் ஊடக அமையம், அகம் மனிதாபிமான வள நிலையம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம், இணைய ஊடகச் செயற்பாடு, வடக்கு - கிழக்கு - தெற்கு ஊடக அமைப்புக்கள் தொடர்ச்சியாக கண்டித்தே வந்துள்ளன.
2000ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டதோடு அரங்கேறிய ஊடகப் படுகொலைகள் நீண்டுகொண்டே சென்றிருந்தது. வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும், அந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படவோ சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.
நாம் வடக்கு, கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களுக்கான சமரசம் செய்துகொள்ளத் தேவையற்றதான நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிவருகின்றோம்.
இலங்கையில் ஆட்சிகள் மாறினாலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிக் கோரிக்கைக்கான சரியான விசாரணைகள் கூட முன்னெடுக்கப்படவில்லை.
2005 – 2009 வரையான நல்லாட்சி காலத்தில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக இழப்பீடொன்றை வழங்குவதற்காக விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டது.
இருப்பினும் அது எந்தப்பயனையும் பெற்றுத்தரவில்லை. பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவ்வாறு விசாரணைக்குழுவே நியமிக்கப்பட்டிருக்கவில்லை என வாதிடப்பட்டிருந்தது. அவர் ஆட்சியை விட்டுத் துரத்தப்படும் வரை ஊடகவியலாளர்களின் விடயங்கள் எதுவும் கவனத்திலெடுக்கப்படவில்லை.
பின்னர் நடைபெற்ற ஆட்சியிலும் பூசிமெழுகல்களே நடைபெற்றிருந்தன. தாங்கள் ஜனாதிபதியானதையடுத்து ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தின் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய வழக்குகளை விசாரணைக்குட்படுத்தப் போவதாக அறிவித்திருந்தீர்கள். அதில் த.சிவராம், லசந்த விக்கிரமதுங்க போன்ற ஊடகவியலாளர்களுடைய வழக்குகளும் உள்வாங்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் நவம்பர் இறுதிப்பகுதியில் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கடந்த 2024 டிசம்பர் மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரமல்ல. சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் முன்னிற்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், விசாரணைகளின் நிலைமை தொடர்பில் இன்னமும் எவ்வித தகவல்களும் வெளியில் வரவில்லை. நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம், ஊழல்களைக் கண்டுபிடிக்கும் செயற்பாடு எனப் பல வேலைகளுக்கு மத்தியில் படுகொலையான ஊடகவியலாளர்கள், காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகள் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டும் என சர்வதேச, தேசிய, வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்களால் தொடர்ச்சியாகவும், மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்துவதை மாத்திரமே செய்யமுடிகிறது.
அந்தவகையில் ஊடகவியலாளர்களின் மரணம் மற்றும் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைககள் தவிர்க்கப்பட்டு வருவதாகவே எம்மால் ஊகிக்க முடிகிறது, வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் இதுவரை அதிகாரத்திற்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் முறையான பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொள்ளவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு அறிவித்தலை வெளியிடுவதும் பின்னர் அது கைவிடப்படுவதும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நடைபெறாது என நம்புகிறோம்.
படுகொலை செய்யப்பட்ட காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைப்பதும் நிவாரணங்கள் வழங்கப்படுவதும் பறிக்கப்பட்ட உயிர்களையும் அவர்களின் குடும்பங்களின் கடந்தகால சிறப்பான வாழ்வையும் தந்துவிடப்போவதில்லை என்றாலும் ஒரு நிம்மதியையேயும் ஏற்படுத்தும் என்றும் நம்புகின்றோம்.
மக்களுக்கு உண்மையான தகவலை வழங்கும் தன்னுடைய பணியைச் செய்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 19 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். அவருடைய நினைவு நாளில் இந்தக் கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.
எமது கோரிக்கைகள்:-
1. படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நீதிக்காக தனியான விசாரணைக்குழுவினை நியமித்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை வழங்க வேண்டும்.
2. இலங்கையின் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் 41 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.
3. கடத்தப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை இலங்கை அரசானது வெளிப்படுத்த வேண்டும் என்பதுடன், பொறுப்புக் கூறலில் இருந்து அரசு விடுபடக் கூடாது எனவும் வேண்டுகின்றோம்.
4. இலங்கையின் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
5. அனைத்து ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
6. குற்றவாளிகளை தண்டணையிலிருந்து விலக்களிக்காமலிருக்கும் கலாச்சாரத்தை கொண்டுவருவதுதான் சுதந்திரமான ஊடக செயற்பாட்டை உறுதி செய்யும். ஆகவே தண்டணையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
செய்தி - ருசாத்
மட்டக்களப்பு
இதேவேளை, திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பிலும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
செய்தி - குமார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |