வடபகுதி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க விசேட குழு
வடபகுதி கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குழுவொன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று (24) வடமாகாண எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பதினொரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பிரதிநிதிகளுக்கும், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முக்கிய கலந்துரையாடல்
இக்கலந்துரையாடலிலேயே இவ்வாறு குழு ஒன்றை அமைப்பதென்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள் 12 பேரும், தேசிய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மற்றும், மன்னார் இணைப்பாளர்களும் நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து வடமாகாண எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட, பதினொரு எதிர்க்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் மற்றும், உள்ளூர் கடற்றொழிலாளர்களால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது.
அத்தோடு அத்துமீறி எல்லை தாண்டி வரும் இந்திய இழுவைப்படகுகளின் இழுவைமடித் தொழில்களால் வடபகுதியைச் சேர்ந்த சிறுதொழிலாளர்கள் பாதிக்கப்படுவதுடன், கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது பேசப்பட்டது.
இந்நிலையிலேயே வடமாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, அவற்றைத் தீர்ப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி குழு ஒன்றை அமைப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |