வாழ்வது கூட தைரியமான செயல்: உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப்பாருங்கள்
"சில சமயங்களில் வாழ்வது கூட தைரியமான செயல்" என்கிறார் தத்துவஞானி லூசியஸ் அன்னியஸ் செனிகா (Lucius Annaeus Seneca).
அந்த வகையில் மனிதர்களாகிய நாம் தமது வாழ்நாள் முழுவதும் நேர்மறை மற்றும் எதிர்மறையான சவால்களைச் சந்திக்கிறோம். நாம் எதிர்கொள்ளும் கஷ்டங்களுக்காக தமது உயிரை மாய்த்துக் கொள்வது ஒருபோதும் புத்திசாலித்தனமான முடிவு அல்ல. மாறாக, இந்த அனுபவங்களைச் சமாளிக்கவும் அவற்றைக் கடக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
எந்த காலகட்டத்திலும் மக்கள் தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை மிக முக்கியமான சமூகப் பிரச்சினையாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமது உயிரை மாய்த்த கொள்ளும் நபரால் நமது உறவுகள் மற்றும் எம்மை சார்ந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி வருக்கின்றது. எனவே உயிரை மாய்த்து வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரையும் அவர்களின் நிலையையறிந்து அவர்களுக்கு உதவி செய்யவேண்டும்
உலகளாவிய ரீதியில் அதிகளவு உயிரை மாய்த்துக் கொள்வோரின் நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் 29 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்ன..!
உலக சுகாதார நிறுவனத்தின் அண்மைய ஆய்வுகளின்படி, உலகளவில் ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 800,000 பேர் தமது உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்று கூறியுள்ளது.
இவ்வாறு உலகளவில் உயிர் மாய்ப்புகள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்து, அதனை பொதுச் சுகாதார பிரச்சினை என்றே உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு 40 நொடிகளிலும் ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இத்தகைய தவறான முடிவுகள் அதிகரிப்பதற்கான காரணம் என்னவென்றால், தனது குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போன்றோர் தற்கொலை என்ற போர்வையில் தமது உயிரை மாய்த்துக் கொள்வதால், குறித்த சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் அதே எண்ணங்கள் தோன்றுவதற்கான மரபணு சார்ந்த ஆபத்துகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
அதிகரித்து வரும் உயிர்மாய்புகளின் பின்னணியில் பல்வேறுபட்ட உளவியல் மற்றும் சமூக காரணிகள் காணப்படுகின்றன.
அதாவது, உயிரியல், உளவியல் மற்றும் சமூக காரணிகளின் கலவையிலிருந்து உருவாகும் ஒரு சிக்கலான மன அழுத்தமுமே ஆகும் . இந்த மன அழுத்தத்தினால் சுமார் 90 சதவீதமானோர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 10ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது, இத் தினம் உலகளாவிய ரீதியில் தற்கொலை என்ற பெயரில் தமது உயிரை மாய்த்துக் கொள்பவர்களை தடுக்கும் நடவடிக்கையாக கருதப்படுகின்றது.
அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் உலக மனநல தினத்தின் கருப்பொருளாக, ‘அனைவருக்குமான மனநலத்தை உறுதிசெய்ய வேண்டும்’ என்பதை சர்வதேச மனநல அமைப்புகள் அறிவித்துள்ளன.
ஆகவே, ஒவ்வொரு நாட்டிலும் இதை உணர்ந்து இந்தப் பிரச்சினைகளைத் தடுப்பதற்கு உண்டான ஒருங்கிணைந்த வழிகாட்டல் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. .
யாழில் அதிகரிக்கும் உயிர் மாய்ப்புக்கள்
அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாணத்தில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸார் வெளியிட்டுள்ள புள்ளிவிபரவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலின் அப்படையில் யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர். இவர்களில் 9 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
அத்துடன், 2023 ஆம் ஆண்டு 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 116 பேரும் , யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 59 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான கால பகுதியில் 54 பேர் தமது உயிர் மாய்த்து கொண்டுள்ளனர். அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள். காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் 39 பேரும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் 15 பேரும் உயிர் மாய்த்துள்ளனர்.
மேலும், இந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 50 பேர் உயிர் மாய்க்க முற்பட்ட வேளையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாட்டின் எல்லா பகுதிகளிலும் ஏதோ ஒரு காரணத்திற்காக உயிர் மாய்ப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
வைத்தியர்களின் ஆலோசனைகள்
இது குறித்து யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பைச் சேர்ந்த மனநல வைத்தியர்களிடம் வினவியபோது, மனநல ஆலோசனை உயிர் மாய்ப்புக்களைத் தடுப்பதற்கான முழுமையான தீர்வாகாது. இது ஒரு அணுகுமுறை மட்டுமே. அதிகரித்து வரும் உயிர் மாய்ப்புக்களின் விகிதங்களைச் சமாளிக்க, சமூகம் அதன் பின்னணியில் உள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணிகளைப் புரிந்துகொண்டு அதைத் தடுக்கும் நோக்கில் செயல்பட வேண்டும்.
இழப்பு, தோல்வி, வெறுப்பு, அவமானம், ஏமாற்றம், குற்ற உணர்வு, தன்னம்பிக்கையின்மை போன்ற பல்வேறு எதிர்மறை உணர்ச்சிகளால் உயிர் மாய்ப்புக்கான எண்ணம் ஏற்படுகிறது.
அதிகமாக, முதிர்ச்சியடையாதவர்கள், உணர்ச்சிகரமான முடிவுகளை எடுப்பவர்கள். மற்றும் ஏமாற்றத்தைச் சமாளிக்கப் போராடுபவர்கள் தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
துக்கம், மனச்சோர்வு, போதைப் பழக்கம் மற்றும் பண சிக்கல்கள் போன்ற பிற காரணிகளும் உயிரை மாய்ப்பு எண்ணத்திற்குப் பங்களிக்கலாம். மேலும், நம்பிக்கைக்குரிய நபருடன் ஒருவரின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வது விரக்தியில் இருப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
மன மகிழ்ச்சியைத் தரும் செரோடோனின் என்ற வேதிப்பொருள் மூளையில் மகிழ்ச்சி உணர்வை உற்பத்தி செய்து உயிரை மாய்த்துக் கொள்ளாபவர்களை குறைக்கும். அதாவது, மருந்துத்தின் மூலம் செரோடோனின் அளவை அதிகரித்து மனச்சோர்வடைந்த நபர்களில் உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணங்களைக் குறைக்கலாம்.
ஆனால், மருந்து மட்டுமே தீர்வு அல்ல. ஒருவர் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டால், அது உதவிக்கான அழுகையாகும். உயிரை மாய்த்துக் கொள்வது ஒரு தீர்வாகாது என்பதையும், அவர்கள் அன்பு, ஆதரவு மற்றும் வழிகாட்டுதலைத் தேட வேண்டும் என்பதையும் அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம்.
மனநலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்கள் மற்றும் மனநல மருத்துவர்களிடமிருந்து தொழில்முறை உதவியைப் பெறத் தயங்கக்கூடாது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பவர்களை நாடாமல் மனநல மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் எனத் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
உயிரை மாய்த்து கொள்ளும் நபர்கள்
அடிக்கடி தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைப்பவர்கள் தங்களுக்கு யாராலும் உதவ முடியாது என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் உதவி வழங்குவதில் செயலில் பங்கு கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த, சத்தான உணவை உட்கொள்வது, போதுமான தூக்கம் மற்றும் இயற்கையான சூழலில் தினமும் குறைந்தது அரை மணிநேரம் செலவிடுவது போன்ற நேர்மறையான பழக்கங்களைப் பின்பற்றப் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நன்மை பயக்கும் இரசாயனங்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது மற்றும் மனநலத்தை மேம்படுத்துகிறது.
ஒரு பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவது தற்கொலை நெருக்கடியின் போது மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். உயிர் மாய்ப்புக்களை நெருக்கடிக்கான சாத்தியமான தூண்டுதல்களை அடையாளம் காணும் அர்ப்பணிப்புக்கான தொடர் படிகளை உருவாக்குவதில் உதவுங்கள்.
அவசர உதவியை வழங்கக்கூடிய தனிநபரின் மருத்துவர், சிகிச்சையாளர், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான அவசியமான தொடர்புத் தகவலைப் பற்றி அறிந்திருப்பதை இந்தச் செயல்பாட்டில் இணைக்க வேண்டும்.
உயிர் மாய்ப்புக்களைத் தடுக்க, நபரின் சுற்றுச்சூழலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவது மற்றும் அதிகப்படியான அளவைத் தவிர்க்கத் தேவைப்பட்டால் மட்டுமே மருந்து கொடுக்கப்படுவதை உறுதி செய்வது முக்கியம்.
உடனடி உயிர் மாய்ப்புக்கள் அழுத்தங்கள் கடந்துவிட்ட பின்னரும் தொடர்ந்து ஆதரவை வழங்குவது முக்கியம், ஏனெனில் இந்த ஆதரவு நபரின் தற்போதைய மீட்புக்கு முக்கியமானது. நபர் எப்போதும் நேரடியாக நன்றியை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஆரோக்கியமான இடத்தை அடைய உங்கள் ஆதரவு அவசியம்.
எனவே, வாழ்க்கையை வாழ இப்போதே ஆயத்தமாகுங்கள். ஒவ்வொரு தனி நாளையும் ஒரு தனி வாழ்க்கையாக எண்ணுங்கள்
உயிர் மாய்ப்புக்கள் எதற்காக..!
மக்களுக்கு ஏற்படும் எண்ணற்ற காரணங்களால் தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் உணர்வுகள் ஏற்படுகின்றது. அவற்றில் சில புரிந்துகொள்ளக்கூடியவை, ஏனையவை புரிந்துகொள்வது மிகவும் கடினம். ஆனால் நெருக்கடியில் உள்ள ஒருவர் அனுபவிக்கும் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மிகவும் உண்மையானவை மற்றும் முற்றிலும் தர்க்க ரீதியானதாகத் தோன்றலாம்.
அந்த வகையில் உயிர்மாய்பதற்கான எண்ணம் என்பது பல்வேறு சூழலில், எல்லா வயதினருக்கும் ஏற்படக் கூடிய எண்ணம் என்றும் இது ஒரு மன நோய் எனவும் மனவள ஆய்வாளர்கள் மற்றும் உளவியலாளர்களின் கருத்துப்படி குறிப்பிடப்படுகின்றது.
மேலும், அதை ஒரு பலவீனமாகக் கருதுவது தவறு என்றோ ஏதாவதொரு செயற்பாட்டினால் தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது கோழைத்தனம் என்றோ ஒருவரின் பலவீனம் என்றோ கூறிவிட முடியாது.
ஏனெனில், மக்களுக்குத் தோன்றுகின்ற உயிர் குறித்து தவறான எண்ணங்கள் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழியில்லாத நிலை ஏற்படுகின்றது. அதாவது, குறித்த விடயங்கள் தொடர்பில் பகிர்ந்துகொள்ள யாரும் இல்லாமல் போகுதல், அல்லது பகிர்ந்து கொள்ள முடியாமல் இருத்தல் போன்ற காரணங்களால் உயிரை மாய்த்துக் கொள்வதற்கான மனநிலை ஏற்பட வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
மேலும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாரிய நெருக்கடி, வேலையின்மை மற்றும் வேலையிழப்பு, கல்வியில் மந்தநிலை, குடும்ப உறவுகளிடையே ஏற்பட்ட நெருக்கடிகள், வன்முறைகள், பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள், அதிகரித்து வரும் சமூக ஊடகங்களின் பயன்பாடு, இளைஞர்களின் மனநிலையில் தாக்கம், குடும்ப அமைப்பில் மாற்றங்கள் அதன் விளைவாகத் தனிமைப்படுத்தப்படும் பிள்ளைகள், பெரியோர் போன்ற பல்வேறு காரணங்களால் மனநலப் பிரச்சினைகள் தீவிரம் அதிகரித்து உயிர் மாய்ப்புக்கான நிலமை ஏற்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
சமகால இலங்கையில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக இளைஞர்கள் பலர் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயல்வதாகத் தெரியவந்துள்ளது.
உள ரீதியாகப் பாதிக்கப்படும் இளைஞர்கள் வாழ்க்கை போராட்டத்திற்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மானிக்கின்றனர். இது குறித்து ‘சுமித்ரயோ’ என்ற அமைப்பு ஆய்வுகளை நடத்தி வருகின்றது.
சுமித்ரயோ அமைப்பின் சேவைகள்
இலங்கையில் உயிர் மாய்ப்புக்களைத் தடுப்பதற்காக சுமித்ரயோ என்ற அமைப்பு கடந்த நான்கு தசாப்தங்களாக செயற்பட்டு வருகின்றது.
இலங்கையர்களின் வாழ்வில் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களை அரித்து அதற்கான விழிப்புணர்வைக் கொடுத்துக் குணமாக்கும் முக்கிய பங்கை இந்த சுமித்ரயோ அமைப்பு கொண்டுள்ளது.
தமது உயிர்களை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றுபவர்கள் குறித்த அமைப்பின் உதவியை நாடும் பட்சத்தில் அவர்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டல்கள் போன்றவைகள் வழங்குகின்றது.
மேலும் இந்த அமைப்பு பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் மற்றும் பின்தங்கிய பிரதேசங்களுக்குக் கூட சென்று உயிர் மாய்ப்பைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் நடத்தி வருகின்றது.
என்ன செய்வது என்று தெரியாமல் தவறான முடிவை எடுத்து தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் பலருக்கு சுமித்ரயோவின் ஆறுதலான வார்த்தையும் சிகிச்சைக்குச் சரியான வழிகாட்டுதலும் கிடைக்கப் பெறுகின்றது.
பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் அனைவரும் அதற்கு எவ்விதமான தீர்வுகள் இல்லை என்று தோன்றுமிடத்து, தொடர்ந்து கவனம் செலுத்தி உணர்ச்சிப்பூர்வமான ஆதரவை வழங்கும் சுமித்திரயோ அமைப்பானது, 365 நாட்களிலும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை எமக்கு உதவிகளைச் செய்வதற்குக் காத்திருக்கின்றது. 00 மேலும், சுமித்ராயோவிடம் 'மெல் மெதுரா' என்ற சிறப்புப் பிரிவு ஒன்று உள்ளது. அதில் மது, போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டவர்களுக்கு, பாவனைக் குறைப்புத்திட்ட நிகழ்ச்சி நிரல்கள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே சுமித்ராயோவுக்கு வருகை தந்தால் நேருக்கு நேர் மற்றும் தொலைபேசி, மின்னஞ்சல் மூலம், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உதவிகளைப் பெற்றுக் கொள்ளமுடியும். குறித்த சேவைகள் அனைத்தும் கண்டிப்பாக ரகசியம் காக்கப்படுவதுடன் முற்றிலும் இலவசமானது.
சுமித்ரயோ தொடர்புக்கு : தொலைபேசி: 011-2692909 / 011-2683555 / 011-2696666
மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org /
இணையதளம்: www.sumithrayo.org
முகவரி: இல. 60/B ஹோட்டன் பிளேஸ், கொழும்பு 7.
மெல் மெதுர தொலைபேசி: 011-2693460 / 011-2694665
மின்னஞ்சல்: melmedura@sltnet.lk
இணையதளம்: www.melmedura.org
முகவரி: இல. 60 ஹோட்டன் பிளேஸ், கொழும்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |