7ஆயிரம் கோடி ரூபாய் வரி : கடிதம் மூலம் மத்திய அமைச்சுக்கு அதிர்ச்சிக் கொடுத்த சிறைக் கைதி
இந்தியாவில் பணமோசடி உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மிகப்பெரிய மோசடியாளனாக கருதப்படும் சுகேஸ் சந்திரசேகர் என்ற சிறைக் கைதி 7ஆயிரம் கோடி ரூபா வரி செலுத்துவதற்கு தயார் என்று மத்திய அரசுக்கு அறிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் மூலம் அவர் இதனை அறியப்படுத்தியுள்ளார்.
7 ஆயிரம் கோடி ரூபாயை வரி
தனக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக கிடைத்த வருமானத்திற்காக 7 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக செலுத்த தயாராக உள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த சுகேஸ் சந்திரசேகர், தொழிலதிபர்களிடம் பண மோசடி செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழில் அதிபர் சிவிந்தர் சிங்குக்கு பிணை பெற்றுத்தருவதாக கூறி, அவரின் மனைவியான அதிதி சிங்கிடம் 200 கோடி ரூபாயை சுகேஸ் சந்திரசேகர் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், அரச வேலை வாங்கித் தருவதாக கூறி 100இற்கும் மேற்பட்டோரிடம் 75 கோடி ரூபா பணத்தினைப் பெற்றுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அதேபோல் 2017ஆம் ஆண்டு அரசியல்வாதி டிடிவி தினகரனிடம் 50 கோடியை லஞ்சமாக பெற முயற்சித்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தனக்கு 2024 - 2025 நிதி ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மூலம் 22,410 கோடி ரூபாய் வருமானமாக கிடைத்ததாக சந்திரசேகர், நிதி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமக்கு எதிராக நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளையும் முடிக்கும் வகையில் 7,640 கோடி ரூபாயை வரியாக செலுத்த தயாராக இருப்பதாகவும் சுகேஸ் சந்திரசேகர், இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.